நாய்கள்



-1-




பீடியை பற்ற வைத்தான் சிவன்.தனக்கும் ஒன்று என்றவாறு கையை நீட்டினான் ராவ்.சாந்தமான சிநேகமான முகம்.என்ன சவரக் கத்தி முகத்தில் பட்டு தான் இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும்.இருவரும் மூடப்பட்டு இருந்த கடையின் சிமெண்ட் படிக்கட்டுகளில் அமர்ந்து பீடி குடித்தவாறு ரோட்டில் போகும் வரும் வாகனங்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.மௌனத்தை உடைத்தவாறு சிவன் ‘எப்ப வக்கீலுக்கு முடிச்ச’ என்று கேட்டான்.

‘என்ன தீடீர்னு’

‘சும்மா சொல்லேன்’

‘தொண்ணூறுன்னு நனைக்கறேன்’

‘அப்படின்னா கிட்டதட்ட ஒரு பத்து பதனைஞ்சு வருஷம் இருக்கும்’ ராவின் முகத்தைப் பார்த்து சொன்னான்.

‘என்னது’ .

‘நீ கோர்ட்டுக்கு போயி’

லேசாக சிரித்தான் ராவ்.

‘ஒங்க அண்ண மட்டும் இல்ல ஒன் கதி நாறிடும்’ என்று சொன்னவாறு பீடியைய் தரையில் தைய்த்தான்.

‘ஏன் நீ இல்ல’ சிரித்தவாறே சொன்னான்.

‘நான் தானே பெரிய கலக்டரு பாரு ,சாக்கட அள்ளற பய’

இருவரும் மௌனம் ஆனார்கள்.

ஒரு மாட்டு வண்டி மெதுவாக சென்றுகொன்டிருந்தது. எதையோ யோசித்தவனாக சிவன் தீடீர் என்று ‘உன்னைய மாதிரி அவனையும் வக்கீல் ஆக்கனும்’ என்றான்.

‘ஆக்கிடலாம்’ .

‘உன்னைய மாதிரின்னா உன்னைய மாதிரியே இல்லடா. தாடியும் ஆளும் ’

இந்த முறை பலமாக சிரித்தான்.

இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் பின்புறம் இருந்த தெருவில் இருந்து ஒருவன் இவர்களை நோக்கி ஒடி வந்தான்.சிவனை பார்த்தவன் மூச்சிரத்தைப்படி இடது கையைய் இடுப்பில் வைத்தவனாக வலது கையை மேலே நீட்டி ‘அண்ணே…. நாலு ஐஞ்சி நாய் சேந்து உன் பையன கடிச்சிருச்சிண்ணே’ .

‘ஐயய்யோ ’ என்று பதறியவனாக எழுந்து தெரு பக்கமாக ஓடினான் சிவன்.பின்னாலே ராவும் வந்தவனும் ஓடினார்கள்.



-2-


V.சீனிவாசன் , Municipal Commissioner என்று மேசை மீது இருந்த பெயர் பலகையை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ராவ். வெளியில் Don’t Kill Stray dogs , killing dogs is inhuman,’நாய்களை கொல்பவர்கள் காட்டுமிராண்டிகள்’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பதினஞ்சு இருவது பேர் கோஷம் போட்டு கொண்டிருந்தனர்.அதில் ’இந்துத்துவ எதிராளிகளே,நாய்களை கொல்லாதே’ என்ற வாசகமும் அடக்கம். அந்த சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.

‘கருத்தடை பண்ணாலும் நாய் கடிக்கும்ங்கிறது அவங்களுக்கும் தெரியும் சார்.கருத்தடை பன்றதுல்லாம் ஒரு சமரசம் தான் சார்’ தலையின் முன் பக்கம் ரோமம் முழுவதும் கொட்டி போயிருந்த மண்டையை சொறிந்தவாறே சொல்லிகொன்டிருந்தார் சீனிவாசன்.

தாடியை வருடியபடி இரு கைகளாலும் முகத்தை துடைத்தவனாக ‘பாவம் பண்னன்டு வயசு பையன்.அவன்னு மட்டும் இல்ல நிறைய இடத்தல கேக்றதில்ல.Duty demands killing stray dogs,rabid or notன்னு காந்தி சொல்லிருக்கார் சீனிவாசன்’.

‘எனக்கு புரியுது சார். காலேஜ் டேஸ்லயிருந்து உங்கள பாத்துக்கிட்டு இருக்கேன்.ஏசி கார்ல போறவன் ஏசி ரூம்ல வாழ்றவன் பேச்சு தான் சார் எடுபடுது. நேய்ட் பண்னன்டு மணிக்கு அவங்க ரோட்ல நடந்து போப்போறது கடயாது.அவங்க பசங்க ரோட்ல நடக்க போறதே கடயாது.அவங்களுக்கு இந்த பரச்சனையெல்லாம் புரியாது சார்.ம்ம்ம்…கருத்தடை பண்ணா இந்தப் பரச்சனை குறைஞ்துடும்ன்னு சொல்றாங்க’ தலையைய் பலமாக ஆட்டிக்கொன்டார் சீனிவாசன்.

‘சரி நான் களம்பறேன் ’ எழுந்து கொண்டான் ராவ்.

சீனிவாசனும் எழுந்தவாறு ‘என்னால முடிஞ்த பண்றேன் சார்’ என்றார்.

வெளியில் வந்தவன் கோஷம் போட்டு கொண்டிருந்தவர்களை பார்த்தவாறு நின்றான்.நிறைய பெண்கள் சொற்ப அளவு ஆண்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.



-3-



அது அந்த ஊரின் பெரிய வீடுகளில் ஒன்று.

சுடுவெயில்.அவன் வீட்டின் வெளி தரையில் லுங்கியும் தோளை சுற்றி மலையாள துண்டும் அணிந்தவனாக படுத்திருந்தான்.பெரிதாக எதையோ முழுங்கி விட்ட மலைப்பாம்பு போல தெருவே நெளிந்துகொண்டிருந்தது. சூரியனை பார்த்தவாறு இருந்தான்.

அநேகமாக உலகத்திலயே இந்த நொடியில் சூரியனை பார்த்து கொண்டிருப்பவன் அவன் மாத்திரமே என்ற எண்ணம் அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது தெருவில் ஒரு காகம் கரைப்பதும்,தெரு முனையில் ஓரு சைக்கிள்காரன் மாத்திரம் செல்வதும் தவிர வேறு இயக்கமே இருக்காது என்று நினைத்தவாறு சிரித்துக்கொண்டான்.

தீடீரென்று சூரியனை போலவே அவனும் தனிமையானவன் என்ற எண்ணம் ஏனோ வந்து தொலைத்து.

வீட்டு வாசலில் குழந்தையுடன் நின்றவாறு அவள் இவனை வெறுப்பாக பார்த்துகொண்டிருந்தாள்.

‘டேய்’ வெறித்தனமாக கத்தினாள்.

‘எக்கா’ என்ற அலறியவனாக எழுந்து வாசலுக்கு அருகில் ஓடி வந்தான்.அவன் முதுகு வியர்த்திருந்தது.

அவனை வெறித்து பார்த்தவாறு ‘வெயில்ல படுத்துக்குட்டு என்னடா பன்னிக்குட்டு இருந்தே’ என்றாள்

‘சும்மா….’ என்றவாறு இழுத்தான்.குழந்தை அதன் உலகத்தில் எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தது.

‘சாக்கட அடைச்சுக்கிச்சே , உங்களுக்குல்லாம் கப்பு அடிக்காதா’ சீறுபவள் போல் கேட்டாள்.

‘அடிக்குதுக்கா நான் போயி யாரயாச்சும் ஈட்டாந்தர்றேன்க்கா’ உடல் நெளிந்தவனாக சொன்னான்.

சிவனை அழைத்து வந்தான்.அவள் வாசலில் குழந்தையோடு படிகளில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

‘ஈட்டாந்திட்டுங்க்கா’

இப்ப என்ன சோறு போட சொல்லிறியா என்று சொல்ல வந்தவள் அதை சொல்லாமல் ‘ பின்னால சாக்கட அடைச்சுக்குச்சுன்னு நினைக்றேன் போயி பாரு பா’ என்று சொன்னவளாக ‘வா வா …..’ என்றவாறு குழந்தையைய் எடுத்து அனைத்தவளாக எழுந்து உள்ளே சென்றாள்.

‘இவங்க யாரு எங்கயோ பாத்த மாதிரி இருக்கே’ யோசித்தவனாக கேட்டான் சிவன்.

‘மாமா சம்சாரம்ண்ணே ,பேப்பரல கீப்பர்ல பாத்து இருப்பீங்க’.

யாரோ மண்டையில் கொட்டியது போல் அப்படியே நின்றவன் ‘நாய்ய கொல்ல கூடாதுன்னு கோஷம் போடறவங்க வீட்லல்லாம் வேல செய்ய முடியாது டா….’ பட்டென்று சொன்னவனாக திரும்பினான்.

‘என்ணன்னே சொல்றீங்க மாமாவுக்கு தெரிஞ்சா பரச்சனை ஆயிடும்ண்னே’ ஒன்றும் புரியாதவனாக கேட்டான்.

‘என்னடா மசிறு முடியாதுன்னா முடியாதுதான் ’ கோபமாக சொல்லி வெளியேறினான் சிவன்.


-4-


இரவு சாப்பிட்டு கொண்டிருந்தான் ரத்தினம் .நான்கு ஒட்டடக்குச்சி உடல். அவள் குழந்தையுடன் பக்கவாட்டில் அமர்ந்திருந்தாள்.

‘என்ன ஒரு மாதிரி இருக்க’ அவளை பார்த்தவாறு கேட்டான். அவனுக்கு கீச்சுக் குரல்.

‘ஆமா எவன் என்னைய மதிக்கிறான்’ அலுத்துக்கொண்டாள்.

சிரித்தவனாக ‘இப்ப என்ன ஆயிப்போச்சு’ என்று கேட்டான்.

‘உங்களுக்கும் கப்பு அடிக்காதா’

‘ஆமா கேக்கணும் நினைச்சேன். எவனும் வந்து பாக்கலயா இன்னும் ’

‘ம்ம்…அதான் வந்தவன் வேல செய்ய முடியாதுன்னு போயிட்டானே’.

‘ஏன்னது….’

‘ஆமா நாய்ய கொல்ல கூடாதுன்னு கோஷம் போடறவங்க வீட்லல்லாம் வேல செய்ய முடியாதாம் சொல்லிட்டு போயிட்டான் ’.

‘யாரு ஆளு ’

‘எனக்கு என்ன தெரியும்… ’

‘சரி சரி நான் பாத்துக்றன் , இதுக்கு போயி அம்முவ கொடு’ என்று குழந்தையைய் வாங்கினான்.



-5-



சிவன் ரத்தினம் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு இருந்தான். ஒரு சிறிய அறை. இன்ஸ்பெக்ட்ரும் ரத்தினமும் அமர்ந்திருந்தனர்.சிவன் அவர்களுக்கு முன் நடுங்கியவனாக நின்று கொண்டிருந்தான்.பக்கத்து அறையில் இருந்து குழந்தையின் ஒயாத அழுகை சத்தம். இருட்டிக்கொன்டிருந்த நேரம்.

‘சொந்த ஊர் எது ’. இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார்.

‘இங்க தான் ஐயா’ .

‘வேல செய்ய முடியாதுன்னு சொன்னியாமே ’.

‘அது…இஷ்டம் இல்லன்னு.. ’ இழுத்தான்

‘சரி கடக்கட்டும்.எல்லாத்தையும் கழட்டு ’.

‘ஐயா’ திடுக்கிட்டவனாக சிவன்

‘அடச்சீ.கழட்டுரா நாயி.. ’

‘ஐயா’

இன்ஸ்பெக்டர் அவன் அருகில் சென்றார்.சிவன் பின்னுக்கு சென்றான்.

‘கழட்டுரா’ குரலை உயர்த்தினார் இன்ஸ்பெக்டர்.கண்ணத்தில் ஒரு அறை விட்டார். அரண்டு போனவனாக சட்டையையும் லுங்கியையும் கழற்றியவன், உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்தான். தன் கோபம் அடங்காத காரணத்தாலோ என்னவோ ‘முட்டி போடுரா ’என்று சைகை காட்டியவாறு உட்கார்ந்தார்.

பக்கத்து அறையில் இருந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது.

‘என்ன அழுதுக்கிட்ட இருக்கு ’குரலை உயர்த்தி கேட்டான் ரத்தினம்

‘ஆயி போக முடியாம அழுதுக்கிட்ட இருக்குங்க.இங்க கொஞ்சம் வாங்கலேன் ’. அவள் குரல் கேட்டது.எழுந்து சென்றான். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகை நின்றது.கையில் நீயூஸ்பேப்பரை அதன் இரு முனைகளையும் அருவெருப்புடன் பிடித்து வந்த ரத்தினம் சிவன் அருகில் அதை கீழே போட்டான். பேப்பரின் ஒரு முனை மற்றொரு முனையை முடியவாறு இருந்ததால் உள்ளே என்ன இருந்தது என்று தெரியவில்லை. அதன் வெளிபுறம் ஈரமாக இருந்தது.பீ நாற்றம் அடித்தது.

‘என்ன உனக்குத்தான் ’ ரத்தினம் குருரமாக சிரித்தான்.

‘ஐயா…’

பேப்பரின் ஒரு முனையேய் திறந்தவன் ‘என்ன ஐயா உயான்னுட்டு தின்றா’.

‘ஐயா வேண்டாய்யா ’ பார்த்தவன் அப்படியே கதறினான்.

‘நாயினா கடிக்கத்கான் செய்யும் உன் புள்ள என்ன படிச்சு பெரிய இவன் ஆவாப் போறானா ’ இன்ஸ்பெக்டர் மூர்க்கமாய் கூறினார்.

‘என்னப்பா பேசிக்கிட்டு டேய் தின்றா …’

‘ஐயா நான் அடைப்ப சுத்தம் செய்யிறேன்ங்கய்யா ’ அழுதவாறு கூறினான்.

‘டேய் நீ ஒன்னும் அத சுத்சம் செய்ய தேவையில்ல.இத்த சுத்தம் பண்ணு போதும்’

‘இப்படி கேட்டுக்கிட்டு இருந்தா சரி வராது ரத்திணம் ’.

‘தின்றா’.

காலால் அவன் மீது ஒரு எத்து எத்தினான் ரத்திணம். அவன் தலைமூடியை பிடித்து தரதர வென்று இழுத்துவந்து பேப்பரில் முகம் படும் போல் அழுத்தினான்.

‘தின்றா நாயே.. ’

எல்லாம் முடிந்துபோனது. அவர்களது கோபமும் தீர்ந்துபோயிருந்தது.


-6-


மீசை,தலைமூடி மழிக்கப்பட்டு இருந்தான் சிவன் .பக்கத்தில் ராவ் அமர்ந்திருந்தான்.இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அனைத்தும் அந்நியமாகத் தெரிந்தது. ரோட்டில் பள்ளி சிறுவர்கள் மூவர் மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.ஓருவன் மாத்திரம் கலர் டரஸ் அனிந்திருந்தான். இன்னைக்கு எனக்கு ஹப்பி பர்த்டே என்று சொல்லும் வயதிலான பள்ளிச் சிறுவர்கள். அவர்களை பார்த்தவாறு இருந்த சிவன் தீடீரென்று பீறிட்டு அழுதான்.ராவ் அவனை சமாதானம் செய்யாமல் பார்த்துகொண்டே இருந்தான்.

-7-


நீதிபதியின் சேம்பரில் உட்கார்திருந்தான் ராவ்.

‘உங்க பேரு என்ன சொன்னீங்க’ நீதிபதி கேட்டார்.

‘சீனிவாசராவ்’

‘நீங்க காலய்ல Petition கொடுக்கரகப்பயே பாத்தேன், Private compliant கொடுக்கீறிங்க,இன்ஸ்பெக்டர் second accused, எல்லாம் சரிதான்,ஆனா நீங்க ஒரு சாட்சிகூட செக்கலையே.’

ராவ் ஏதேனும் பதில் சொல்வான் என்று எதிர்பார்த்தார் நீதிபதி.ராவ் வாயை திறக்கவில்லை.

‘நிங்க சத்தியநாராயணா தம்பி தானே’

‘ஆமா சார்’

நீதிபதி அனைத்தையும் மறந்து சிரித்துவிட்டார்.‘சார்ன்னு கூப்பட்ட மோத வக்கீல் நீங்கதான்’ என்றார்.

தேவையின்றி சிரித்துவிட்டோமோ என்று எண்ணிய நீதிபதி ‘நான் யாரையும் நார்மலா சேம்பர்ல அலோ பன்னறதில்ல.Anyway, i am returning the petition. சாட்சிய கொண்டுவாங்க , கண்டிப்பா எடுத்துக்றன்’ என்று சொன்னவாறு பெட்டிஷனை அவனிடம் நீட்டினார்.



-8-


‘ என்னாச்சு ’.முன்கூட்டியே அறிந்தவன் போல் கேட்டான் சிவன்.

‘என்னாவும்.நம்மலாலதான் ஒரு சாட்சி கூட ரெடி பண்ண முடியலயே’. கோபமாக கத்தினான் ராவ்.

‘ம் ’.சலனமில்லாமல் இருந்தான் சிவன். பீடி குடித்தவாறு ‘நான் களம்பறன் ’ என்றான். ராவ் பதில் பேசவில்லை.

‘இனிமே இங்க வரமாட்டேன்.அவ ஊர் பக்கம் போயிடலாம்ன்னு பாக்றேன்’.

‘ம்’

‘சரி நான் களம்றேன் ’.எழுந்து கொண்டான் சிவன்.ராவும் எழுந்தான்.

‘எப்ப போற’ அவன் முகத்தை பார்த்தவாறே கேட்டான் ராவ்.

‘நாளைக்கு’.

‘வரேன் ’ என்றவன் சட்டென்று திரும்பி சைக்கிளை நோக்கி சென்றான்.ஒரு நொடி நின்றவன் திரும்பி ராவ் அருகில் வந்தான்.

‘பையன் செத்துட்டான்.பீ தீங்க வைச்சாய்ங்க.சாவனும்ன்னு தோன மாட்டிங்கிது பாத்தியா ’.அவன் உதடு துடித்தது.

ராவ் அவனை அப்படியே கட்டிக் கொண்டான்.சிறிது நேரம் அப்படியே உறைந்து போனவர்களாக இருந்தனர். இவற்றின் சாட்சி பூதமாக ஒரு நாய் இவர்களையே பார்த்துகொண்டிருந்தது.

‘நாளைக்கு காலைய்ல வீட்டுக்கு வா’ என்று சொன்னவாறு சைக்கிளை எடுத்து திரும்பி பார்க்காமல் சென்றான். ராவுக்கு எதோ மாதிரி இருந்தது.அப்படியே அமர்ந்தான்.தீடீரென்று ஆவேசம் அடைந்தவன் போல் எழுந்து அப்படி இப்படி நடந்தான்.கைகளையும் கால்களையும் உதறினான். ‘எனக்கு கோவம் வருது. எனக்கு கோவம் வருது ’ என்று கத்தினான்.அவனை பார்த்து கொண்டிருந்த நாய் பயந்துபோய் எழுந்து ஒடியது.‘எனது கண்டனத்தை நான் தெரிவிக்க வேண்டும் ’ என்றவாறு கத்தினான்.பக்கத்தில் கடையில் இருந்தவர்கள் அவனையே பார்த்து கொண்டிருந்தனர் .

மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு நறிக்குறவர்கள் வந்து கொண்டிருந்தனர்.ஒரு கைக்குழந்தையைய் தன் மார்போடு சேர்த்து கட்டி இருந்தான் ஒருவன். அவர்களை பார்த்து கொண்டிருந்தவன் தீடிரென்று அவர்கள் அருகில் சென்றான்.

‘வணக்கம்’ என்று கைகுப்பயவாறு சொன்னான் ராவ்.அவர்களுக்கு எதுவும் புரியாமல் பார்த்தார்கள்.

‘குழந்தைக்கு என்ன பேரு’ குழந்தையைய் வைத்திருந்தவனை பார்த்து கேட்டான்.

அவன் பதில் கூறாமல் தன்னை சுற்றி உள்ளவர்களை பார்த்தான்.

யோசித்தவன் ‘கும்டறன் சாமின்னு பேர் வைங்க’ என்றான்.

‘சாமி’

‘ம் அதில்ல . கும்டறன் சாமி, கும்டறன் சாமின்னு வைங்க. ’சுற்றும் பார்த்தான்.பக்கத்தில் கடையில் இருந்து தன்னையே பார்த்து கொண்டிருந்த இருவரை அழைத்தான்.

‘என்ன’ என்றான் ஒருவன்.

‘குழந்தைக்கு பேரு வச்சிருக்கு.மூனு தடவ கூப்புடுங்க. ’

‘எது. ’

‘கும்டறன் சாமி பேரு ’ராவ் சிரித்தவாறே சொன்னான்.

‘என்னது’ ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

‘சரியான லூசு பய..’ மெதுவான குரலில் ஒருவன் சொன்னான்.

‘கும்டறன் சாமி, கும்டறன் சாமி, கும்டறன் சாமி போதுமா ’.

‘நீ கூப்புடு’.ராவ் மிகவும் சஷ்தோஷாமாய் இன்னொருவனை பார்த்து சொன்னான்.

‘கும்டறன் சாமி, கும்டறன் சாமி, கும்டறன் சாமி. ’

சிரித்தவாறே ராவ் பத்து ரூபாய் எடுத்து குழந்தையைய் வைத்திருந்தவனிடம் கொடுத்தான். ‘இந்தாங்க பத்து ரூபா தான் இருக்கு. குழந்தைக்கு பேரு வைச்சா கொடுக்கனுமாமே’. அவர்கள் வாங்காமல் அப்படியே நின்றனர். ‘வாங்கிங்க’ என்று அவன் கையைப் பிடித்து கொடுத்தான். வாங்கிங் கொண்டு சென்றனர்.அவர்கள் போவதை பார்த்து கொண்டே இருந்தான் ராவ்.கடையில் இருந்தவர்கள்,அவன்,அவள்,இவன்,இவள்,அவர்கள்,இவர்கள்,இதை படிப்பவர்,எழுதியவர் என எல்லோரும் அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர். இறுதியாக கடவுள்களும்.

No comments: