புயலிலே ஒரு தோணி





நமக்கு இந்த புவியில் பல விஷயங்கள் பிடிக்கவில்லை.மிக பெரிய அமைப்பு.ஒன்றும் செய்வதற்கில்லை.எங்கு நோக்கினும் அற்பப் பதர்கள்.மனதை சமநிலை படுத்திக்கொள்ள அங்கதம்.அப்போதும் மனம் கேட்கவில்லை.அங்கதம் கசப்பாக மாறுகிறது.அந்தக் கசப்பை நாம் ப.சிங்காரத்தில் காணலாம்.

மாதவர் நோண்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்....
சிங்காரம் மனிதன் மீது , மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரோ , அல்லது தாகங்கள் கொண்ட அற்ப மனிதர்கள் தானே என்ற கரிசனமும் இல்லை.'கட்டுபாடு இல்லாத மனிதன் கொடிய விலங்கு' என்றே நாவல் பேசுகிறது.

பாண்டியன் மந்தைகளிலிருந்து விலகி செல்லும் மனிதன்.ஆனாலும் அவனும் சொல்கிறான் -வல்லவன் வகுத்ததே வாய்க்கால்.நேதாஜி, காந்தி, ஸ்டாலின், மார்க்ஸ், எப்படியோ மந்தைகளுக்கு தேவை ஒரு ஆளுமை.வல்லமையான ஆளுமை.'எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும்'.இந்த வரிதான் நாவலில் மறுமறுபடி வருகிறது.இது தான் பாண்டியனை செயலில் ஆழ்த்துகிறது.

* பாண்டியன், தில்லைமுத்து , தங்கையா தமிழ்ர்கள் நிலை குறித்த உரையாடல்.
* பாண்டியன், மாணிக்கம் ,மற்றவர்கள் தமிழ் பெருமை பற்றிய உரையாடல்.
* இறுதியல் மறுபடியும் பாண்டியன் தங்கையா அறிவுநெறி பற்றிய விவாதம்.
* பாண்டியன் பினாங் செல்ல முடிவு எடுத்தபின் அவனது பாலியல் உறவுகள் குறித்த சிந்தனை.
* மறுபடியும் பினாங்கிலிருந்து சுமத்ரா செல்கையில் ஒழுக்க நெறி பற்றிய அவனது எண்ணங்கள்.

இந்த எண்ணங்களை தொகுத்து பார்த்தால் அந்த மந்தை வாழ்வின் கசப்பும் அதிலிருந்து தப்பிச் செல்ல எண்ணும் பாண்டியனின் சாகஸமும்,பின்னர் சாகஸத்திலிருந்து அறநெறி நோக்கிய அவனது பயணம் தெரிகிறது.சாகஸத்திற்கு சமநிலை ஒத்துவராது.ஆக பின்புலம் யுத்த காலம். அசாதாரண காலம்.உரையாடலும் நினைவுமாக சின்னமங்கலம், மதுரை வாழ்வு.இப்படியாக விரிகிறது நாவல்.

நாவலின் இறுதியில் பாண்டியனும் தங்கையாவும், பாண்டியன் கொரில்லா போரில் ஈடுபட முடிவெடுத்தபின் அறிவுநெறி, அறநெறி பற்றி பேசும் உரையாடலே இந்த நாவலின் உச்சம்.முதலில் அறிவியல் கோட்பாடுகள்.பின்னர் அந்த கோட்பாடுகளை நிருபிக்க வேண்டி அதே கோணத்தில் உருவாக்கப்படும் கருவிகள்.இது ஒரு நோக்கு , ஒரு பார்வை.முற்றான உண்மைகள் அல்ல. அதற்கு நிகரானதும் சற்று மேலானதும் என்று அறநெறி பற்றி பாண்டியன் கூறுவதுதான் நாவலின் தரிசனம்.அறநெறி என்பது மாறாது இருப்பது.அப்போதுதான் குழப்பங்க்ள் இருக்காது என்கிறான் பாண்டியன்.கட்டுபாடு இல்லாத மனிதன் கொடிய விலங்கு என்ற வாக்கியத்திற்கு நாவலின் பதில் அறநெறி மிக்க வாழ்க்கையே சரியான தீர்வு என்பதில் முடிகிறது.இது மானிடத்தை நோக்கி தேவதூதன் கூறும் அறநெறி அல்ல.மாறாக இது கசப்பினம் முழுமையில் கிடைக்கும் தரிசனம்.அதுவே ப.சிங்காரத்தின் தரிசனம்.

புயலிலே ஒரு தோணி.தோணி என்பது பாண்டியன் என கொண்டால் யுத்தம் என்பது புயல் என கொள்ளலாமா.

-தமிழினி வெளியீடு



No comments: