இருப்பே சுவர்க்கம்





ஆலமரத்தின் இலைகள் சூரிய ஒளியை எகிற நோக்க அவை பச்சை வெள்ளி கண்களாயிரமாய் அந்த வெளிச்சத்தில் சுவர்க்கமாகிறது.இருப்பே திரிசங்கு சுவர்க்கமாகிறது. தபஸேற்றது ஆல் என்கிற வரியில் ஆலமரம் அப்படியே Freeze ஆகி நிற்கிறது.இதில் ஆலமரம் மட்டுமல்ல.அதை, அந்த நொடியில் இயற்கையின் இடைவெளிகள் அற்ற படைப்பாற்றலை பார்த்து வியந்து நிற்கும் அந்த கவிஞனுக்கும் அது சுவர்க்கம்.வாசித்து அதை அனுபவமாக கொள்கையில் வாசிப்பவர்க்கும். பிரமளின் கவிதை.

திரிசங்கு

தளராத ஏழுதூண்
வேரூன்றி
அணுவிதையில் விளைந்த
அடையாளம் தெரியாமல்
விஸ்வரூபம்
விரிந்து
பச்சை வெள்ளிக்
கண்களாயிரம்
அந்தரத்தில்
இறங்கும் ஒளியை
எகிறி நோக்க
தபஸேற்றது
ஆல்.
ஒவ்வொரு இலையிலும்
தெறித்தது சுவர்க்கம்.



இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1





ஒரு முன்வரலாற்று ஆய்வாளருக்கு இருக்கக்கூடிய முதன்மையான பணி தான் ஆய்வு செய்ய விரும்பும் மறைந்துபோன மக்களின் வாழ்வை பற்றி எவ்வளவு இயலுமோ அவ்வளவு கற்றுக்கொள்வதுதான்.அவன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை விட சாட்சிகளோடே வேலை செய்ய விரும்புவதால் , சிலசமயம் தன்வரலாற்றையே எழுதாது வாழும் மக்களிடம் அத்தகைய ஒளியுட்டும் இணைக்கோடுகளை கண்டுகொள்கிறான்.கண்டிப்பாக இந்தியாவை தவிர வேறெங்கும் நாம் இத்தகைய இணைக்கோடுகளை இவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.ஒன்று மட்டும் உறுதி, பண்டைய காலத்தில் எழுதப்பட்ட எவற்றையுமே இந்தியாவின் வரலாறாக கொள்ள முடியாது.இஸ்லாமிய அரசர்களுக்கு முன்பு( பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பமாகும்) வாழ்ந்த எந்த ஒரு வரலாற்று நாயகனின் ஆண்டையும் துல்லியமாக கூறுவது மிக அரிது .மேலும் பொதுவான கூறுகள் உண்மைகளுக்கோ பொது அறிவுக்கோ அக்கறை செலுத்துவதாக இல்லை.சுருங்கச் சொல்வதென்றால் , கண்டிப்பாக இன்று இந்தியாவில் இருக்கும் பல பழங்குடி இனமக்களின் பழக்கவழக்கங்கள் பண்படா காலத்தை ஒத்தது. இந்தியாவில் மொத்தம் உள்ள 440 மில்லியன் மக்களில் 30 மில்லியனை(சுமார் 6 சதவீகிதம்) பிரதிநித்துவப்படுத்தும் இந்த மக்கள் முன்வரலாற்றில் இருந்த இந்தியாவின் பல்வேறு அம்சங்களை தொல்படிமங்களாக பாதுகாக்கின்றனர்.


கி.மு. மூன்றாயிரத்திலிருந்தே மாநகரங்களும் நாகரிங்களும் இருந்திருக்கையில் எப்படி வரலாற்றுக்கு முன்பிலிருந்து பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இல்லாத இந்த மக்களின் வாழ்க்கை ஜீவிக்க முடிந்தது. இதற்கான விடை உணவு கிடைப்பதில் இருக்கிறது.இந்தியாவில் உணவு பற்றாக்குறை அனைவரும் அறிந்ததே.ஆனால் இது ஒப்பிடுகையில் தற்போதய உருவாக்கமே.இப்போது கூட பெரு விளைச்சல் கொடுக்காத நிலங்களில் வேலை செய்யும் கிராம விவசாயிகள் மற்றும் வறுமையில் வாழும் மாநகர்வாசிகளுக்கு மட்டுமே வரையறுக்கக்கூடியது இது.இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை மிகுந்த நேசக்கரம் கொண்டதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெறும் வேட்டை மற்றும் பண்டைய உணவு பாதுகாப்பு மூலமே மக்கள் எளிதாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.இப்போது கூட அதீத பயிரிடுதல் மற்றும் மிக அதிக அளவில் காடுகளை காலிசெய்து நிலத்தின் இயற்கை விரிப்பை நீக்காத இடங்களில் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.மீன் மற்றும் வேட்டையாடப்படும் மிருகங்கள் பறவைகள் தாராளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற பல்வேறு இயற்கை பொருட்களும் தன்னளவில் போதுமானதாக இருப்பதால் இது சமநிலையான உணவை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.பழங்கள், பருப்புகள் , பெர்ரி பழ வகைகள், கீரைகள் , சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், காளான்கள் , தேன் — நூற்றுக்கும் மேற்பட்ட இதுபோன்ற இயற்கை பொருட்களை பருவங்களில் சேகரிக்க முடியும்.ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்திற்கு பாதுகாத்து வைக்கக்கூடிய பெரிய எண்ணிக்கையிலான உணவுப்பொருட்கள் வேளாண்மை செய்யாமலும் செய்தும் வளர்கின்றன.எள் (உட்கொள்ளக்கூடிய எண்னெயயை வழங்கக்கூடியது) , கோதுமை, அரிசி, பல்வேறு அவரை வகைகள், சோளம் மற்றும் சிறுதானியங்கள் இது போன்ற வகைகளை சார்ந்தவை. உண்மையில் கெளதம புத்தரின் நாட்களில் (கி.மு. ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு) சிறுதானியம் Panicum frumentaccum வேளாண்மை செய்யாமல் சேகரிக்கப்பட்டதுதானே தவிர பயிரிடப்பட்டதே இல்லை.



படம் - கரசூர் பத்மபாரதி எழுதிய நரிக்குறவர் இனவரைவியல் புத்தகத்தின் அட்டைப்படம்


கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.