இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்


கவிதை தனிமொழியாலானது. அந்த தனிமொழியை அறிந்தவன் அல்ல நான். இந்த குறிப்பு நான் கவிதைகளை புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி மட்டுமே.இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளை வாசிக்கும் போது அதில் சில இடங்களில் சுகுமாரனின் தொடர்ச்சியை பார்க்க முடிகிறது.உதாரணமாக சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள் கவிதையொன்றில் நாம் எப்போதும் இருப்பது கோடைகாலத்தில் தானே என்கிற வகையில் ஒரு வரி வரும். அதன் தொடர்ச்சியை நாம் கோடை கவிதையிலும் பார்க்கலாம்.கோடையில் வாழ்ந்து கோடையில் மடிகிறேன் என்று முடிகிறது இந்த கவிதை. எந்த ஒரு படைப்பாளியுமே தன்னை வரையறுத்திக்கொண்டு முன்வைப்பதில்லை.ஆனால் ஒரு வாசகன் அதை ஏதேனும் ஒரு வகையில் தொகுத்துக்கொள்ள பார்க்கிறான்.அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் இந்தக்குறிப்பும்.

ஒரு நகரித்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் எப்போதும் எதிர்பாராமையோடு பகடையாடிபடியே இருக்கிறார்கள். அந்த நாளின் வரவு எப்படியிருக்கும் என்று அவர்கள் படபடப்புடனே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சித்திரங்கள் இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளில் தொடர்ந்து வருகிறது. கதவு என்றோரு கவிதை.கதவு என்பது ஒரு வாய்ப்பிற்கான வாசல்.வெவ்வேறு வாய்ப்புகளுக்காக திறப்புகளுக்குகாக சதாகாலமும் மூடப்பட்ட கதவின் முன் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இது திறக்காது என்றால் பிரச்சனையில்லை.எல்லோரும் சென்று உறங்கிவிடுவார்கள். ஆனால் அவ்வப்போது அது திறக்கப்படுவதற்கான சமிக்ஞைகள் வந்தபடியே இருக்கின்றன.ஆக அவர்கள் திறக்கப்படாத கதவின் முன் நெடுங்காலம் காத்திருக்கிறார்கள்.இந்த காத்திருத்தல் தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல் பற்றிய கவிதையாக நம்பிக்கையின் தேவதை என்பதில் வருகிறது.அன்றைய நாளில் எந்த பொம்மைகளையும் விற்க இயலாமல் வீடு திரும்ப யத்தனிக்கும் சித்திரம் பொம்மைகள் விற்பவன் என்ற கவிதையில் வருகிறது. வேட்டையில் சிறு முயல்கூட கிடைக்காமல் வீடு திரும்பும் ஒருவனின் கையறு நிலை வீடு திரும்புதல் கவிதையில் வருகிறது.இதையே நாம் முல்லா, கிறிச் கிறச்,நெய்தல்,குழந்தை கவிதைகளிலும் பார்க்கலாம். இந்த கவிதைகளை பற்றி பாவண்ணன் சொல்வது போல மேலும் ஒரு சித்திரம் இருக்கிறது. வீடு திரும்புதல் பிரச்சனையில்லை.வெறும் கைகளோடு வீடு திரும்புதல் தான் பிரச்சனை.அதனால் தான் வேட்டைக்கு சென்றவன் வழியில் சில நாவற்பழங்களையும் மரவள்ளிக் கிழங்குகளையும் சேகரித்து செல்கிறான்.

இருத்தலியம் சார்ந்த கவிதைகளையும் இவர் எழுதியிருக்கிறார். மேலே சொன்னது போல கோடை அப்படியானதொரு கவிதை. கான்கீரிட் இறுக்கத்திலிருந்து விடுப்பட்டு சூறைக்காற்றாய் மாறி அலையத் துவங்கினான் உலகத்து வீதிகளில் என்ற அவதாரம் கவிதை , ஒரு நாளின் இரவில் வீடு திரும்புபவனின் இழப்புகள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கும் நகரம் வசன கவிதை , கானாமல் போன மரப்பாச்சி பொம்மையை போல தானும் கானாமல் போவது எப்படி என ஏங்கும் மரப்பாச்சி கவிதை, குழந்தைமையின் நாட்களை இழந்துவிட்டதின் ஏக்கத்தை முன்வைக்கும் சிறுவன் ததாதிதீ கவிதை , தினம் தினம் கொலை செய்யப்படுகிறது என் பிணம் என ஒவ்வோரு நாளின் இருத்தல் சார்ந்த துயரை பேசும் கொலையுறு பிணம்,மேடையில் தன் வசனங்களை பேச இயலாமல் பொருத்தமில்லாத வசனங்களை பேச நேரும் மேடை கவிதை , சதா கண்காணிக்கப்படும் சித்திரத்தை தரும் சுதந்திரம் கவிதை ஆகியவற்றை ஒருவகையில் இருத்திலியம் சார்ந்த கவிதைகள் என்று வகைமை படுத்தலாம்.இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவது தேவையற்றது என்றும் இது போன்ற கவிதைகள் நிறைய எழுதப்பட்டிருக்கிறது என்றும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் அதை ஒரு கவிஞன் பொருட்படுத்த தேவையில்லை என்று தான் நான் சொல்வேன். வேறு எப்போதும் விட இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இயந்திரம் போல இருக்கிறோம். கான்கீரிட்டின் இறுக்கத்தை பொறுக்க முடியாமல் மூச்சு விட கட்டிடத்தை விட்டு கொஞ்ச நேரம் சாலையில் வந்து நின்றுகொள்வேன் நான் அவ்வப்போது. ஆக இது ஒரு சூழலின் பிரச்சனை.அது பாடுபொருளாக இருக்கத்தான் செய்யும்.அந்நியமாதல் இருக்கையில் இருத்தலியம் சார்ந்த கவிதைகள் இருப்பதில் என்ன தவறு.ஆட்டத்தின் விதிகளில் இல்லாமல் என்னை சற்று வெளியே உலாவ விடுங்கள் என்கிற ரீதியிலான கவிதைகளும் இதில் இருக்கின்றன.ஊழியன் & கம்பெணி(பி) லிமிடெட் ஒரு படைப்பாளி தன் ஆளுமையை எப்படி ஒரு நிர்வாகத்திற்கு தகுந்தாற் போல கத்திரித்து கொள்ள வேண்டிருக்கிறது என்பது பற்றிய கவிதை.என் பகல் நேரத்தை எடுத்துக்கொள்கிறாய் இரவையாவது எனக்குக் கொடு என்று பண நோட்டில் இருக்கும் கானுறை வேங்கையிடம் இரைஞ்சும் சித்திரம்தான் கானுறை வேங்கை கவிதை.ஆட்டம் ,Mr.இடியட் என்ற கவிதையும் ஆட்டத்தின் விதிகளை பற்றிய கவிதை தான்.

இந்த வகையான மேலே சொன்ன தொகுப்புக்குள் அடங்காத கவிதைகளும் நிறைய இந்த தொகுப்பில் இருக்கின்றன். எனக்கு இந்த தொகுப்பில் மிகவும் பிடித்த கவிதை ஈரச்சாட்சி.மழை , ஜன்னல் வழியாக தூக்கு மாட்டும் ஒருவனை பார்க்கும் காட்சி மிகுந்த கவித்துவமானது.சட்டென்று ஒரு சித்திரத்தை மனதில் கொண்டு வந்து விடுகிறது.இன்றைய விளம்பரங்களை பற்றிய ஒரு நல்ல கிண்டல் தேவ செய்தியாளர்கள்.இந்த கவிதை தொகுப்பில் தேவையற்றது என்ற தோன்றிய கவிதை - கவிதையாம்... என்ற கவிதை.

காயசண்டிகை - இளங்கோ கிருஷ்ணன் - காலச்சுவடு வெளியீடு.



No comments: