To Negate






மிக அதிக அளவில் தமிழ் இலக்கிய புத்தகங்களை வாசித்தும் எழுதியும் தன் வாழ்க்கையை தமிழ் இலக்கியத்திற்காக அர்ப்பணித்துவிடும் ஒருவருக்கும் அவரின் பக்கத்து வீட்டில் தினசரி செய்திதாள் தவிர வேறு எதுவும் வாசிக்காத ஒருவருக்கும் தினசரி வாழ்க்கைமுறை சார்ந்து என்ன வித்யாசம் இருக்கிறதென்று பார்த்தால் ஒன்றுமில்லை.அபிலாஷ் சமீபத்தில் எழுதிய குறிப்பொன்றில் மாற்று சாதியில் திருமணம் செய்துகொள்வது பற்றி எழுதியிருந்தார்.உண்மையில் சாதி மாறி திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயமா? பெருநகரங்களாக மாறிவிட்ட சென்னையில் வாழும் மத்தியதரவர்க்கத்தினை சேர்ந்த ஒருவர் எந்த மாற்று சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டாலும் அவரை யாரும் ஊர் விலக்கமோ சாதி விலக்கமோ செய்யப்போவதில்லை.இன்று இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கூட இல்லாத பலர் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.பெருநகரங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சாதி அதன் அர்த்தததை இழந்துவிட்டதுதான் உண்மையான காரணம்.அதே நேரத்தில் பெருநகரங்களில் வாழும் ஒருவர் சாதியை இறுக பற்றிக்கொள்வதற்கு முக்கிய காரணம் அந்நியமாதல்.இந்த அந்நியமாதல் அவரை ஏதோ ஒன்றோடு அடையாளபடுத்திக்கொள்ள வற்புறுத்துகிறது.அவருக்கு இலக்கிய எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தால் அவர் சாதியை விட்டுவிடுவது அவருக்கு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை.ஹெச்.ஜி.ரசூல் சில வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் பற்றி எழுதியதை தொடர்ந்து அவரை ஜமாத் ஊர் விலக்கம் செய்தது.சிறுநகரத்தில் வாழ்ந்துகொண்டு அதை அவர் நீதிமன்றத்தில் எதிர்த்தார்.வெற்றிபட்டார்.அதுதான் பெரிய விஷயம்.மற்றபடி மாற்று சாதி திருமணமெல்லாம் பெருநகரங்களில் பெரிய விஷயமே இல்லை.இன்று பெருநகரங்களில் ஒருவர் நன்றாக சம்பாதிப்பவராக இருந்தால் தனியாக வாழ்வதில் எந்த சிரமமும் இல்லை.சிறுநகரங்கள், கிராமங்களின் உலகமே வேறு.அங்கு நமக்கு ஒரு அடையாளம் இருக்கிறது.அங்கு வாழ்க்கை நடத்தும் ஒருவர் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்வது இன்றும் கொஞ்சம் சிரமமான காரியம் தான்.பெருநகரங்களில் இருக்கும் அடையளாமின்மை நமக்கு பல செளகரியங்களை தருகிறது.அந்த செளகரியத்தின் மூலமாக நாம் அடைந்த ஒன்றாகத்தான் மாற்று சாதி திருமணங்களை பார்க்க முடியுமே தவிர அதை ஒரு கலகமாகவோ மாற்றமாகவோ ஒரு கருத்தியல் வெற்றியாகவோ பார்க்க முடியாது.

கருத்தியல் வெற்றி என்கிற போது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.இன்று நடந்துவரும் பல மாற்றங்கள் கருத்தியல் ரீதியாக அடைந்த மாற்றங்கள்தானா. எண்பது தொண்ணூறுகளுக்கு பிறகு பின்நவீனத்துவம் தமிழில் அறிமுகமாகிறது.சிந்தனையின் பெருங்கதையாடல் நவீனத்துவம் என்றால் மையமற்ற சிறுகதையாடல் பின்நவீனத்துவமாகிறது.அதன் அடிப்படையில் மையத்திற்கு வெளியிலிருந்து தலித்தியம் , பெண்ணியம் என்ற தளங்களிலிருந்து பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள்.இன்று தலித்துகளும் பெண்களும் திருநங்கைகளும் அடைந்துவரும் மிக குறைந்த வெற்றிகள் இந்த பின்நவீனத்துவம் மூலமாக பெற்ற கருத்தியல் வெற்றிகள்தானா.உலகமயமாதலும் , அதன் மூலமாக அடைந்த தொழில்மய நகரமயமான சமூகம் இல்லாவிட்டால் இன்று மேற்சொன்னவர்கள் வாழ்க்கையில் மிக குறைந்த அளவிலான இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா?இந்த பொருளாதார மாற்றங்கள் இல்லாவிட்டால் தலித்துகளின் பெண்களின் திருநங்கைகளின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.அப்படியென்றால் நமது பெரும்பாலான எழுத்தாளர்களும் இதழ்களும் செய்துகொண்டிருப்பது என்ன? ஒரு சமூகத்தில் பண்பாடு மேற்கட்டுமானம் என்றால் பொருள் உற்பத்தி அடித்தளம் என்று பிரிக்கிறது மார்க்ஸியம்.இந்த மேற்கட்டுமானம் அடித்தளம் இவற்றுக்கிடையிலான முரணில் உருவாகுவது இயக்கம்.அடித்தளத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் , பொருள் உற்பத்தி இவற்றை தொடர தொழில்மய சமூக்த்திற்கு விழுமியங்கள் தேவை.அந்த விழுமியங்களை உருவாக்கவும் , தொடரவும் செய்ய மேற்கட்டுமானத்தில் உதவுபவை தான் சமயம் , கோவில் , பள்ளி ,கல்லூரி எல்லாம்.அவற்றில் ஒன்றாக இன்று முடங்கிபோனது தான் நவீன தமிழ் இலக்கியம் அல்லது பின்நவீனத்துவ தமிழ் இலக்கியம்.சாராம்சத்தில் இன்றைய தமிழ் எழுத்தாளர்களும் , இலக்கிய இதழ்களும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று பார்த்தால் நகரமயமான தொழில்மயமான சமூகம் நிலைத்திருக்க தேவைப்படும் தனிமனித விழுமியங்களை உருவாக்க போராடிகொண்டிருக்கிறார்கள்.Civic Sense அவ்வளவுதான்.பெங்களூரில் என் அலுவலகம் இருக்கும் சாலை பிரதான சாலை என்பதால் பாதசாரிகள் கடப்பதற்காக Traffic Lights பொருத்தப்பட்டது.ஒரு நாள் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிவதற்குமுன்பே போக்குவரத்தில் ஏற்பட்ட ஒரு இடைவெளியில் பலரும் சாலையை கடக்க முயன்றோம்.அப்போது ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ சேர்ந்த ஒரு வெளிநாட்டுக்காரர் Wait for the Signal என்று கத்தினார்.யாரும் பொருட்படுத்தவில்லை.ஒரு வகையில் நம் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் இதழ்களும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு இனக்குழு சமூகம் தனிமனிதர்களிலான சமூகமாக மாறிவரும்போது Transitionயில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இவை.பச்சை விளக்கு எரியும் போது சாலையை கடப்பதற்கான விழுமியங்களை பள்ளியில் கற்றுத்தர மறந்துவிட்டதால் இவர்கள் நமக்கு கற்றுத்தர விரும்புகிறார்கள், அவ்வளவுதான்.இந்த விழுமியங்களை காலப்போக்கில் பள்ளிகளே கற்றுத்தர ஆரம்பித்தால் நமது தமிழ் கூறும் நல்லுலகின் கருத்துலகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை.எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு மேடையில் கூடங்குளத்தின் எதிர்பாளர்களுக்கு ஆதரவாகவும் , ரஷ்ய தூதர் கூடங்குளம் எதிர்பாளர்கள் இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்கள் என்று சொல்கிற இன்னொரு மேடையில் அமரந்து அவர்கள் தரும் விருதை பெற்றுக்கொள்வதிலும் பிரச்சனையில்லை.ஜெயமோகனுக்கு காந்தியை பற்றி பேசிக்கொண்டே அப்துல் கலாம் கையால் விருது வாங்கிக்கொள்வதில் பிரச்சனையில்லை..சாரு நிவேதிதா கூடங்குளம் பற்றி விஞ்ஞானிகள் பேச வேண்டும் என்கிறார்.மனுஷ்யபுத்திரனுக்கு தொழில்மயமான சமூகத்திற்கு தேவையான நவீன விழுமியங்களை உருவாக்க நிறைய போராட்ட களன்களை சந்தித்துகொண்டிருக்கிறார்.காலச்சுவடு கண்ணனுக்கு தான் கூடங்குளம் எதிர்பாளர்களின் ஆதரவாளன் என்று சொல்லிக்கொள்வதிலும் , எஸ்.பி.உதயகுமாரிடம் காலச்சுவடு பற்றிய கருத்தை பதிவு செய்வதிலும் அக்கறை நிறைய இருக்கிறது.கனிமொழியின் முதல் பாராளுமன்ற உரையை பிரசுரித்தவர் அதன் முன்னோ பின்னோ எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் உரையை பிரசுரித்திருக்கிறார்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஜெயமோகன் எழுப்பிய கருத்தியல் உருவாக்கும் அதிகாரம் பற்ற கேள்விகள் தஸ்தாவெய்ஸ்கியால் நூற்றிஐம்பது வருடங்களுக்கு முன்பே கேட்கப்பட்டுவிட்டது.தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் நாவலில் , பேதை நாவலில் விஞ்ஞானம் குறித்து தொழில் மய சமூகம் உருவாக்கும் அறவீழ்ச்சியை பற்ற பேசியதை நெருங்கக்கூட இங்கு யாருமில்லை.உண்மையில் அதுதான் கலை.ஹெர்பர்ட் மார்க்யூஸா சொல்வது போல The Purpose of Art is to Negate.தமிழ் இலக்கியம் செய்து கொண்டிருப்பது To Permit.சரி அப்படியென்றால் தமிழ் அறிவுஜீவி பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் அளித்த கருத்து கொடை எதுவும் இல்லையா.இருக்கிறது.அவர்கள் அளித்த மிகப்பெரிய கருத்து கொடை- தமிழ் தேசியம்.



No comments: