பெருங்கருணை





பஷீரின் அனைத்து ஆக்கங்களிலும் அநேகமாக ஏதோ ஒரு வயோதிகர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து சர்பத் அருந்தியவாறு தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களின் பாவனைகளையும் பாசாங்குகளையும் வேடிக்கை பார்த்தவாறு இருக்கும் தோற்றம் கிடைக்கிறது.தாராசங்கர் பந்தோபத்யாயாவின் ஆரோக்கிய நிகேதனம் நாவலிலும் இந்த தொனியை பார்க்கலாம்.தமிழில் கி.ராவிடம் இந்த தொனி இருக்கும்.

பஷீரின் ஏதோ ஒரு புத்தகத்தில் ஒரிடத்தில் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் , அதில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது போல ஒரு வரி வரும்.பஷீர் பற்றி எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ஒரு கட்டுரையில் பஷீரை பற்றிய ஒரு நிகழ்வை சொல்கிறார்.பஷீர் ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு காசு கொடுக்க பார்க்கும் போது அவரின் பர்ஸ் தொலைந்துவிட்டது என்பதை உணர்கிறார்.கல்லாவில் இருப்பவன் பஷீரின் ஜிப்பாவை கழற்ற சொல்கிறான்.பஷீர் ஏதும் புரியாத நிலையில் இருக்கும் போது அவர் அருகில் ஒருவன் வந்து பஷீர் கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு அவரை வெளியே அழைத்துவருகிறான்.சிறிது தூரம் வந்தபின் பல பர்ஸ்களை காட்டி இதில் உன்னுடையதை எடுத்து கொள் என்று சொல்கிறான்.அவன் சிறுது தூரம் சென்றபின் அவன் பெயரை கேட்கவில்லையே என்று நினைத்துகொள்கிறார்.ஒரு வேளை கருணை என்று இருக்குமோ என்று எண்ணுகிறார்.அதாவது மனிதர்கள் இயல்பில் கீழ்மையும் தீமையுமான குணங்களால் ஆனவர்கள்.அங்கிருந்து பார்க்கும் போது அந்த மனிதர் பஷீருக்கு செய்தது பெருங்கருணை தான்.நம்மால் பிறருக்கு பெரிய தொந்தரவுகள் இல்லாமல் வாழ முடிந்துவிட்டாலே அது சிறந்த வாழ்க்கைதான்.நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்றால் நம்மால் இப்படிதான் இருக்க முடியும்.நமது அன்பு, பாசம், புரட்சி , காதல் எல்லாவற்றையும் தோல் உரித்து பார்த்தால் அதில் நாம் மட்டும் தான் இருப்போம்.கடவுள் இல்லை , சாத்தானும் இல்லை.தந்தை , தாய், சகோதர சகோதரிகள், நண்பர்கள், காதலி,பிள்ளைகள் எல்லாம் ஒரு வகையில் நாம் மட்டும் தான்.நமது உடலின் நீட்சி.அவ்வளவே.ஏந்த புனிதமும் இல்லை , ஏந்த அறமும் இல்லை.அதாவது நாம் இப்போது அறம் பிறழ்ந்த சமூகத்தில் வாழவில்லை.நாம் எப்போதும் இப்படியே இருந்திருக்கிறோம்.இப்போதும் இப்படித்தான் இருக்கிறோம்.எப்போதும் இப்படித்தான் இருப்போம்.இலங்கையில் நிகழ்ந்த போரின் போது தன் உடலின் ஒரு உறுப்பு துண்டிக்கப்பட்டது போல உண்மையிலேயே துடித்த மனிதர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.நிச்சயம் என் துயரம் அந்தளவுக்கு இல்லை.நான் ஒரு இரவு கூட அந்தரங்கமாக கண்ணீர்விட்டு அழவில்லை.நந்திகிராம் நிகழ்வின் போது நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன்.அது என் லட்சியம் தோற்றுபோனதின் வருத்தமே தவிர மனித உயிர்களின் மரணத்தில் உருவான துயரம் அல்ல.நமது லட்சியங்களுக்காக , நமது சொந்தங்களுக்காக நமது நண்பர்களுக்காக என்று இல்லாமல் நம்மால் வாட முடியும் என்று தோன்றவில்லை.வள்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்.அருட்பெருட்ஜோதி அருட்பெருட்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருட்ஜோதி என்பதே வள்ளலாரின் ஆன்மிகம்.அந்த தனிப்பெருங்கருணை தான் வடலூரில் வயிற்று பசி தீர வருவோருக்கு அண்ணமிடும் எரிதழல்.இன்று இங்கே நின்று பார்க்கும் போது அந்த மனவிரிவு , அந்த ஆன்மிகம் எல்லாமே எட்ட முடியாத தொலைவில் எங்கோ இருப்பது போல இருக்கிறது.இத்தனைக்கும் வடலூர் சபை நான் பிறந்து வளர்ந்த நெய்வேலி பெரியாகுறிச்சியிலிருந்து ஐந்து கீலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது.


என் பால்ய காலத்தின் மனிதர்




பால்ய காலத்தில் நெய்வேலியில் இருந்தபோது சில விடுமுறைகளின் போது பண்ருட்டியிலிருந்த என் சித்தப்பா வீட்டில் சென்று நாங்கள் தங்குவது வழக்கம்.என் சித்தப்பா பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர சபை செயலாளராக இருந்தார்.சிலர் அவரை தலைவரே என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.வீட்டில் இரண்டு அடி அகலமும் ஒரடி நீளமும் கொண்ட லெனின் , மார்க்ஸ், ஸ்டாலின் புகைப்படங்களும் அதில் ஏதோ வாசகங்களும் இருக்கும்.சமயங்களில் கட்சி கூட்டத்திற்காக அவருடைய வீட்டிற்கு வெளியே கம்பங்களை கிடத்தி அதில் கட்சி கொடியை கட்டிக்கொண்டிருப்பார்கள்.ஏதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட்கள் என்றால் நல்லவர்கள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள் என்ற பிம்பம் அப்போது மனதில் பதிந்துவிட்டது.ஒரு கட்டத்தில் கட்சியில் சேரலாமா என்ற எண்ணம் இருந்தது.இந்த பிம்பம் அநேகமாக 2007யில் என்னுடைய இருபத்தியைந்தாவது வயது வரை இருந்தது.அப்போது மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த நந்திகிராம் சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.அப்போது வாசித்த ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் புத்தகம், லட்சியவாதங்களுக்கு பின்னால் இருக்கும் கோர முகம் என்று பல விஷயங்கள் பயங்கரமாக குழப்பிவிட்டது.அதன்பிறகு சிறிதுசிறதாக கம்யூனிஸம் போன்ற விஷயங்களின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு போய்விட்டது.ஆனால் இப்போதும் நான் வாக்களிக்கும் தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் நின்றால் அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவேன்.அநேகமாக 2007யில் நிகழ்ந்த கயர்லாஞ்சி சம்பவம் என்னை இன்னொரு வகையில் பயங்கரமாக உலுக்கிவிட்டது.அந்த சம்பவம் , அந்த கிராமத்து மனிதர்கள், உயர் சாதி பெண்கள் அதை வேடிக்கை பார்த்தது என்று மனிதர்கள் மீதான நம்பிக்கையெல்லாம் தகரும் முதல் தருணமாக அது இருந்தது.

என் சித்தப்பா சென்ற வாரம் மரணமடைந்தார்.இயற்கை மரணம். பண்ருட்டியில் அவருடைய வீட்டில் ஒரு கட்டத்தில் ஒன்றோ இரண்டோ பசுமாடுகள் இருந்தன.பேரிங் வியாபாரம் வெகு ஜோராக சென்றுகொண்டிருந்தது. இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.நிம்மதியான குடும்ப வாழ்க்கை.விவசாய நிலங்கள் வாங்கினார்.அவரின் கடையில் நான்கைந்து நபர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.கட்சியில் நல்ல பொறுப்பு..அந்த காலகட்டம்தான் அவர் வாழ்வின் பொற்காலம்.அவரும் என் தந்தையும் இளமையில் மிகவும் வறுமையில் இருந்தனர்.முதலில் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை என்ற ஊரில் இருந்தார்கள்.பின்னர் பண்ருட்டி  வந்தார்கள்.என் தந்தை சட்டம் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஐஸ் பேக்டரி வைத்து இருவரும் நடத்தினார்கள்.பின்னர் பேரிங் வியாபாரம்.என் தந்தையின் திருமணம்.ஏதோ மனகசப்புகளால் என் தந்தை நெய்வேலி வந்துவிட்டார்.மிகவும் வறுமையிலிருந்து ஒரளவு நல்ல நிலைமைக்கு வந்த என் சித்தப்பாவிற்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது.அதிலிருந்துதான் அவரின் பொருளாதார சரிவு ஏற்பட்டது.மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்டது.நோய்மை அளிக்கும் மனகசப்புகளால் அவரின் வாழ்க்கை நோக்கு மாறிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.பின்னர் அதிலிருந்து வெளியே வந்து ஒரளவு நன்றாகத்தான் இருந்தார்.ஆனால் பொருளாதார ரீதியாக அவரால் மீளவே முடியவில்லை.ஒரு வகையில் அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய வாழ்க்கைதான்.சிலம்பம் கற்றிருந்தார்.வீட்டில் சாட்டை வைத்திருந்தார்.பெரிய மீசை வைத்திருப்பார்.மிகவும் இறுக்கமானவர்.அநேகமாக எப்போதும் வேஷ்டிதான் அணிந்திருப்பார்.அவர் என்னிடம் எப்போதும் பெரிதாக பேசியதாக எனக்கு நினைவில்லை.

கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் அவர் உடல் எரியூட்டப்பட்டது.தீ சட்டென்று வைக்கோலை பற்றிக்கொள்கிறது. ஒரு மனிதினின் உடல் எரிகிறது.முப்பதே வருடங்கள் நிரம்பிய என் வாழ்க்கையில் மனிதர்கள் மீதும் சித்தாந்தங்கள் மீதும் கடவுள் மீதும் எந்த நம்பிக்கையும் அற்ற ஒரு இருண்ட பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.என் பால்ய காலத்தில் லட்சிய வாழ்க்கையின் மீதும் நன்நெறிமீதும் எளிமை மீதும் ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பை உருவாக்கிய அந்த மனிதரை நினைத்துக்கொள்கிறேன்.அந்த நாட்களின் அறியாமை என் வாழ்க்கையை மறுபடியும் பற்றிக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அது ஒருவகையில் நான் அவர் மீள் எழுந்து வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வது போலத்தான்.என் வாழ்க்கையில் ஒளி நிரம்பிய காலத்தில் நான் பார்த்து வியந்த ஒரு மனிதர் மறைந்துவிட்டார்.அவருக்கு என் அஞ்சலி.

ஆயுதங்களுக்கு விடைகொடுத்தல்






A Farewell to Arms என்ற ஹெமிங்வேவின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஹென்றியும் ஆல்பர் காம்யூவின் மெர்சால்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.மெர்சால்ட்டிடம் ஒரு தத்துவ சாய்வு உண்டு.ஹென்றி அப்படி எந்த தத்துவ கனமும் இல்லாத தூய உயிரியல் பிண்டம்.ஹென்றி ரெட் வைன் அருந்துகிறான்.காபி மெல்கிறான்.ஆற்றில் மீன் பிடிக்கிறான்.தன் கட்டளைக்கு அடிபணியாத என்ஜினியர்களை சுடுகிறான்.ஒரு முறை அவனுக்கு பால்வினை நோய் வந்திருக்கிறது.காதலிக்கிறான்.புணர்கிறான்.நன்றாக உண்கிறான்.உறங்குகிறான்.தன் உயிருக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு தருணத்திலும் அதிலிருந்து தப்பிக்கும் அதீத உயிர் இச்சை கொண்டவனாக இருக்கிறான்.தன் குழந்தையும் காதலியும் இறந்துபோகும் போது வயிற்றில் ஒரு வெற்றிடத்தை உணர்கிறான்.இந்த நாவலில் ஒரிடத்தில் ஹென்றி நினைக்கும் ஒரு வரி முக்கியமானது.நான் இங்கே இருப்பது கேத்ரீனுடன் சேர்ந்து உண்பதற்கும் உறங்குவதற்கும் தான்.சிந்திப்பதற்கு அல்ல.தன் இறந்து பிறந்த ஆண்குழந்தையை பற்றி நினைக்கும் போது ஆம், இங்கே எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.நாம் எதையும் கற்றுக்கொள்வதற்கான நேரம் இருப்பதில்லை.அல்மோ போல சுடப்பட்டு இறந்துபோகலாம்.நண்பன் ரினால்டி போல சிபிலஸால் கொல்லப்படலாம்.நீங்கள் இங்கே இருந்தால் போதும் , எப்படியும் கொல்லப்படுவீர்கள்.ஹென்றி மரணத்தை இறப்பாக பார்க்கவில்லை.கொல்லப்படுவதாக பார்க்கிறான்.ஒரு வேட்டையாக.இயற்கையின் வேட்டை.சகமனிதர்களின் வேட்டையாக.

பிரெட்ரிக் ஹென்றி ஒரு அமெரிக்கன்.இத்தாலியில் முதலாம் உலகப்போரின் போது முதலுதவி ஊர்தியின் அதிகாரியாக பணிபுரிகிறான். ஹென்றிக்கும் அவனின் அறை நண்பனாக வரும் ரினால்டிக்குமான நட்பு மிகவும் நெகிழ்ச்சியானது.ரினால்டி மருத்துவன்.அங்கே ஒரு மருத்துவமணையில் செவிலியராக இருக்கும் கேத்ரீன் என்ற பெண்னை ஹென்றி காதலிக்கிறான்.முதலில் ரினால்டிதான் கேத்ரீன் மீது ஈர்ப்பு கொள்கிறான்.அவளை அறிமுகம் செய்து வைப்பதற்காக ஹென்றியை அழைத்து செல்கிறான்.முதல் சந்திப்பிலேயே கேத்ரீனுக்கு ஹென்றிமீது பற்று ஏற்பட்டுவிடுகிறது.பின்னர் காதல்.ஹென்றி போரின் போது காலில் காயப்பட்டுவிடுவதால் மிலன் நகரில் மருத்துவமணையில் அனுமதிக்கப்படுகிறான்.அங்கு கேத்ரீனுடன் நிறைய நேரம் செலவழிக்க முடிகிறது.இறுதியில் அவன் மருத்துவமணையிலிருந்து போர் முனைக்கு திரும்பும் போது கேத்ரீன் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.அங்கே இத்தாலி படைகள் தோற்றுவருவதால் பாசறைக்கு திரும்புகிறார்கள்.அப்போது நிகழும் பல சம்பவங்களின் ஊடாக ஹென்றியுடன் வரும் அல்மோ சுடப்படுகிறான்.   தன் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை என்ற காரணத்தால் என்ஜினியர்கள் இருவரை ஹென்றி சுடுகிறான்.பின்னர் தான் தனது துருப்புகளை விட்டுவிட்டு தனியே சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சுடப்படலாம் என்று தெரிகிறபோது நதியில் குதித்து தப்பிக்கிறான்.கேத்ரீனை சந்திக்கிறான்.இருவரும் சுவிஸர்லாந்தில் தங்குகிறார்கள்.ஹென்றி கேத்ரீன் விரும்புகிறாள் என்பதால் தாடி வளர்க்கிறான்.கேத்ரீனிக்கு பிரசவ வலி எடுக்கிறது.மருத்துவமணையில் சேர்க்கிறார்கள்.கேத்ரீனால் குழந்தையை வெளிய தள்ள முடியாததால் சிசேரியன் செய்கிறார்கள்.சேய் இறந்து பிறக்கிறது.கேத்ரீனுக்கு நிறைய இரத்தப்போக்கு இருப்பதாக செவிலியர் சொல்கிறார்.ஹென்றி வெளியில் அமர்ந்து கடவுளிடம் பிராத்திக்கிறான்.தான் எதை வேண்டுமானாலும் செய்வதாக சொல்கிறான்.குழந்தையை எடுத்துக்கொண்டாய்.கேத்ரீனை எடுத்துக்கொள்ளாதே.உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று இரைஞ்சுகிறான்.கேத்ரீன் இரத்தப்போக்கால் இறந்துவிடுகிறாள்.இறந்துபோன தன் காதலியின் அறையில் நிற்கும் போது ஒரு சிலை அருகே இருப்பது போல உணர்கிறான்.சட்டென்று தன் ஒட்டல் அறை நோக்கி அந்த மழை இரவில் நடந்து செல்கிறான்.

ஹென்றி ஒரு முறை கேத்ரீனை அவள் வேலை செய்யும் மருத்துவமணையில் பார்க்க வருகிறான்.அப்போது அவள் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் பார்க்க இயலவில்லை.திரும்பும் போது வெறுமையாகவும் காலியாகவும் உணர்கிறான்.இத்தாலிய படைகள் பாசறைக்கு திரும்பும் தருணத்தில் ரினால்டி சிபிலஸ் நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதை அறிகிறான்.பின்னர் அதைப்பற்றி நிணைத்துப்பார்க்கும் போது நோய் முதலிலேயே கண்டிறியப்பட்டால் குணப்படுத்திவிடலாம்.ஆனால் அச்சமும் வருத்தமும் இருக்கத்தான் செய்யும்.எனக்கு இருந்தால் நானும் வருத்தப்படுவேன் என்று நினைத்துக்கொள்வான்.எதன் மீதும் பற்றற்ற ஒரு தூய உயிரியல் பிண்டமாகவே ஹென்றி இருக்கிறான்.ஒரு முறை அவனுடன் இருக்கும் ஒரு பாதிரியார் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்பார்.இல்லை என்பான்.எப்போதும் இருந்ததில்லையா என்று பாதிரியார் கேட்பார்.இரவுகளில் சில நேரம் நிணைத்துக்கொள்வதுண்டு என்பான்.அப்போது பாதிரியார் அது அச்சத்தாலும் காமத்தாலும் வரக்கூடிய ஒன்று என்பார்.அவனுக்கு தேசம் குறித்தோ , கடவுள் குறித்தோ ,சக மனிதர்கள் குறித்தோ பற்றுதல் இல்லை.ஒரு வேட்டையாக உலகை பார்பவனாக இருக்கிறான்.ஆல்பர் காம்யூவின் மெர்சால்ட் தன் இறப்புக்கு முந்திய தருணத்தில் அவனுக்காக பிராத்திக்க வரும் பாதிரியாரின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவான்.அந்த இடத்தில் ஹென்றி இருந்தால் மிகவும் அச்சத்தோடு இருந்திருப்பான்.முடிந்தால் தப்பித்திருப்பான்.ஒரு போதும் வாழ்வதற்கான இச்சையை அவன் விட தயாராக இல்லை.பாதிரியாரை வெளியே தள்ளியிருக்க மாட்டான்.அவரை பிராத்தனை செய்ய அனுமதித்திருப்பான்.தப்பிப்பதற்கான வழியில்லையென்றால் அந்த பிராத்தனை குறித்த எந்த அலட்டலும் இல்லாமல் அச்சத்தோடு புகைபிடித்துக்கொண்டிருப்பான்.மெர்சால்ட் இந்த வாழ்க்கையை அபத்தமாக பார்க்கிறான்.ஹென்றி அபத்தமாக பார்க்கவில்லை.தான் வேட்டையாடப்படுவதாக நினைத்தவாறு அச்சத்தோடு உறங்கபோவான்.

இந்த நாவலை படித்த போது சமீபத்தில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்ப்பில் படித்த 'பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்' என்ற தொகுப்பில் உள்ள ஒரு கவிதைதான் நினைவுக்கு வந்தவாறு இருந்தது.

உண்கிறோம் கழிக்கிறோம்,
உறங்குகிறோம்,விழிக்கிறோம் -
இதுதான் நம் உலகம். இதன் பிறகு
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
ஒன்றுதான்.
இறப்பது.

                                                                           - இக்யு ஸோஜன்


A Farewell to Arms - Ernest Hemingway.

முகமூடி





சமீபத்தில் முகமூடி திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன்.இந்தப்படம் வந்த போது பரவலாக எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.நான் வாசித்தவரை அபிலாஷ் உயிர்மை இதழில் எழுதிய விமர்சனம் அந்த திரைப்படத்தை பொருட்படுத்தி அதன் மெய்யிலை பற்றி ஒரு அற்புதமான பார்வையை அளித்திருந்தது.படத்தை பார்க்கும் போது ஒரு விஷயம் புரிந்தது.இது அடிப்படையில் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றே தோன்றுகிறது.தற்காப்புக்கலை குறித்த ஒரு ஆர்வத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்குவது இந்த திரைப்படத்தின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.மிகவும் தீவிரமான ஒரு திரைப்படத்தை எடுக்கத்தெரியாதவர் அல்ல மிஸ்கின்.அவரின் அஞ்சாதே , சித்திரம் பேசுதடி போன்ற திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் இந்த திரைப்படத்தில் எங்கும் பெண்கள் மீதோ குழந்தைகள் மீதோ வன்முறை நிகழ்த்தப்படவில்லை.கொலைகளும் காட்டப்படுவதில்லை.இரண்டு தாத்தாக்கள்.ஒரு கூன்விழுந்த உதவியாளன்.வேலை இல்லாத இளைஞன்.ஒரு குங்பூ மாஸ்டர்.கொள்ளைகூட்டத்து தலைவன்.இங்கே நரேன் கறுப்பு நிற உடையணிந்து மிகப்பெரிய கறுப்பு நிறத்திலான இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு காட்சி வரும்.அது ஒரு கார்டூன் காட்சியை போலத்தான் இருந்தது.அதே போல நரேன் பேசும் வீடியோ காட்சியும் அப்படியான தோற்றத்தைத்தான் ஏற்படுத்தியது.மேலும் இறுதிக்காட்சியில் தாத்தாக்கள் மாறுவேடத்தில் வரும் காட்சி, கதாநாயகனுக்கு பேட்மேன் போன்ற உடை எல்லாமே ஒரு கேலிச்சித்திரத்தின் தண்மையோடுதான் எடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த திரைப்படத்தின் முக்கிய விஷயம் தற்காப்புக்கலை.தற்காப்புக்கலை என்ற அளவில் மட்டுமே குங்பூவை பற்றி சொல்லாமல் அதில் உள்ளூறைந்திருக்கும் ஆன்மிகத்தையும் இந்த திரைப்படம் பேசுகிறது.லீயின் மாஸ்டர் மிக எளிய வாழ்க்கையத்தான் வாழ்கிறார்.அவர் அந்த கலையை வைத்து எந்த பணத்தையும் சம்பாதிக்கவில்லை.மேலும் லீயின் குரு அவனுக்கு சொல்லிக்கொடுக்கும் வடிவத்தை அவன் இறுதிக்காட்சியில் நரேனுக்கு எதிராக பயண்படுத்துகிறான்.தன் குருவை கொன்றதை , நண்பனை கொன்றதை பற்றி சொல்லி லீயை கோபப்படுத்துகிறான் நரேன்.வன்மம் கொள்ளும் போது சமநிலை குலைகிறது.சமநிலை குலையும் போது எதிரியை எளிதாக வீழ்த்தலாம்.ஆனால் லீ பாலத்தின் மேல் நின்று சமநிலையை அடைகிறான்.அவன் தான் அதுவரை கற்ற கலையின் மூலமாக ஒரு ஆன்மிக மெய்மையை கண்டடைகிறான்.அதுவே இந்த திரைப்படம் அளிக்கும் முக்கிய விஷயம்.அதை குழுந்தைகளுக்கு தற்காப்புகலை குறித்த ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக சற்று கார்டூன் வடிவத்தில் உருவாக்கியிருப்பதாக தோன்றுகிறது.

தங்க மீன்கள்



கற்றது தமிழின் பிரபாகரனை விட தங்க மீன்களின் கல்யாணி தன்னை சுற்றியுள்ள மனிதர்களை நன்றாக புரிந்துகொள்கிறான்.அவனுக்கு யார் மீதும் புகார் இல்லை.கல்யாணி விமான நிலையத்தில் தன் தங்கையிடம் பேசிவிட்டு சென்றபின் அவளின் முகம் அண்மை காட்சியில் பதிவுசெய்யப்பட்டு இருக்கும்.கல்யாணிக்கு அவளின் தங்கை மீது எந்த புகாரும் இல்லை.தன்னை அறைந்துவிடும் தந்தை மீது கூட புகார் இல்லை.பார்வையாளர்களுக்கும் கல்யாணியை எல்லோரும் ஏளனம் செய்கிறார்கள் என்றோ புண்படுத்துகிறார்கள் என்றோ எண்ணம் ஏற்படும் வகையில் காட்சியில் அமைக்கப்படவில்லை.கல்யாணியின் தந்தை ‘அவன் மிகவும் நல்லவன், திரும்ப வருகையில் கொஞ்சம் கெட்டவனாகத்தான் வரட்டுமே’ என்று சொல்வார்.கல்யாணி லெளகீகமானவனாக மாறும் சித்திரமும் இந்த கதையில் இருக்கிறது.தன் குழந்தையை சித்ரவதை செய்யும் பள்ளி அமைப்பிலிருந்து மாற்றி அவளை அரசு பள்ளியில் சேர்க்கும் இடம் கூட அவன் உண்மையில் வாழ்வின் யதார்தத்தை புரிந்துகொள்ளும் இடம்தான்.

ஸ்டெல்லா மிஸ்ஸூம் பள்ளியும் கூட குற்றம் சொல்வதற்கு இல்லை என்பதைத்தான் எவிட்டா மிஸ் கதாபாத்திரம் உணர்த்துகிறது.இன்று மாறிவரும் பெருநகர அமைப்பின் சங்கிலியில் ஒரு கண்ணிதான் பள்ளிக்கூடங்கள்.சுதந்திரமான சிந்தனையும் வெளிப்பாடும் இந்த அமைப்பிற்கு தேவையில்லை.பள்ளியில் ஒரு குழந்தையின் உடல் ஒடுக்கப்படுகிறது.அந்த குழந்தை தன் இடத்தை விட்டு நகராமல் அமர வைப்பதற்கான முயற்சிதான் பள்ளியின் முக்கிய பயிற்சி.சுதந்திரமற்ற வெளியும் சுவர்களும் அவர்கள் பிற்காலத்தில் ஒரு அலுவலகத்தில் எந்த படைப்பூக்கமும் அற்ற வேலையை செய்ய வேண்டியதன் அவஸ்தையை எளிதாக்குவதற்கான ஒரு வழிமுறை.கல்யாணி தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு தன் குழந்தையை மாற்றுவது இந்த உலகமயமாக்கல் சங்கிலியின் கண்ணியாக தன் பிள்ளை மாற வேண்டாம் என்பதை உணரும் தருணம்.

பாத்திரங்களுக்கு ஈயம் புசும் வேலை உள்ளூரில் நலிவடைந்து வருவதால் கல்யாணி பெருநகரத்திற்கு சென்றே ஆக வேண்டிய அவசியம்.இன்றைய பெருநகர அமைப்பின் மனிதர்களாக மாறுவதற்காக நடத்தப்படும் பள்ளிகளின் அவசியம்.அப்படிப்பட்ட பள்ளியில் படிக்கும் செல்லம்மா.அவளுக்கு பெரிதாக பிரச்சனைகள் இல்லை.ஆனால் dyslexia போன்று கற்றுக்கொள்வதில் அவளுக்கு பிரச்சனைகள் இருக்கிறது.இங்கும் ஒரு விஷயம் இருக்கிறது.அவள் மற்ற பிள்ளைகள் போல இல்லை.அவளுக்கு சற்று வேறு விதமாக சொல்லித்தரவேண்டியிருக்கிறது.அத்தனை பெரிய பள்ளியில் அவளின் பிரச்சனைகளை கேட்டு ஆராய்ந்து அவளுக்கான வழிகளை உருவாக்கும் பொறுமை யாருக்கும் இல்லை.இன்று எல்லாமே ரெடிமேட் தான்.அந்த ரெடிமேட் அளவுக்கு கீழேயோ மேலேயோ நீங்கள் இருந்தால் தனிமைபடுத்தப்படுவீர்கள்.ஆக செல்லம்மா , கல்யாணி ஆகிய இருவரும் இன்றைய அமைப்பின் தேவைக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக்கொள்ள இயலாமல் தவிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் கல்யாணி தானும் சரி செல்லம்மாவும் சரி தங்களை அப்படி வடிவமைத்துக்கொள்ள தேவையில்லை என்பதை உணர்வதுதான் அரசுப்பள்ளியில் செல்லம்மா சேரும் இடம்.அவள் அங்கு குளத்தின் தங்க மீன்களை பார்க்கிறாள்.மறுபடியும் தன் குழந்தைமையை மீட்டெடுக்கிறாள்.இனி அவள் திருடப்போவதில்லை.கல்யாணி செல்லம்மா நாளை வந்து சேரவேண்டிய பெருநகர வேலைக்காக இன்று அங்கு போய் கஷ்டப்படதேவையில்லை.அந்த சிற்றூரே போதும்.இது தங்க மீன்களின் ஒரு முக்கிய இழை.

இந்த படத்தின் விளம்பரங்கள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.ரஜினிகாந்த் தன்னுடைய பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டுமென்று எஸ்.ராமகிருஷ்ணன் ஆசைப்படும் போது ,இலக்கிய நூல்கள் சினிமா இயக்குனர்களால் வெளியிடப்படும் போது, ஜெயமோகன் அப்துல் கலாம் கையால் விருது வாங்கும் போது , இத்தகைய விளம்பரங்களும் தவறில்லைதான்.மேலும் இன்றைய சூழலில் பெரிய அளவிலான விளம்பரங்கள் இல்லாமல் ஒரு திரைப்படம் திரைக்கு வந்ததா என்று கூட அறியமுடியாது.

மாற்று சினிமா : நிஜமும் நிழலும்







வெங்கட் சாமிநாதன் எழுதிய அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதையில் பேராசிரியர் சென்னையில் தன் வீட்டில் கழுதையை பராமரிக்க முடியாததால் அதை சென்னையிலிருந்து தன் கிராமத்திற்கு ரயிலில் கொண்டுசெல்வதாக ஒரு காட்சி இருக்கும்.அதே ஜான் ஆப்ரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படத்தில் அது பேருந்தாக மாறியிருக்கும்.மாற்று சினிமாவின் முக்கிய பிரச்சனை திரைக்கதை திரைப்படமாக மாறும் போது நிறைய நடைமுறை சிக்கல்களை அது சந்திக்க நேர்கிறது என்பதுதான்.புதுமைப்பித்தன் எழுதிய ஒரு சிறுகதையின் பெயர் நிசமும் நிழலும்.ஒரு எழுத்தாளர் பதிப்பாளரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்பதையும் உண்மையில் எவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என்பதையும் சொல்லும் கதை.மாற்று சினிமா முயற்சிகளும்  அப்படியானதுதான்.ஒரிரு வருடங்களுக்கு முன் கிரிஷ் காசரவள்ளி இயக்கிய கூர்மாவதாரம் படத்தை பார்த்தேன்.குறைந்த செலவில் எடுக்க வேண்டிய அவஸ்தை இயக்குனருக்கு இருந்திருக்கிறது என்பதை நாம் அதில் எளிதாக உணரமுடியும்.

வெகுஜன சினிமாவாக இருந்தாலும் மாற்று சினிமாவாக இருந்தாலும் இரண்டிற்கும் கிட்டத்தட்ட அதே தொழில்நுட்ப கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , படப்படிப்பு தளம், உணவு , ஆடை வடிவமைப்பு, போக்குவரத்து என்ற அனைத்து தளங்களிலும் வேலை ஒரே போல இருக்கிறது.இந்த தொழில்நுட்ப கலைஞர்கள் , துணை நடிகர்கள் எல்லோரும் சங்கங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆக மாற்று சினிமா உருவாக்கத்திலும் அவர்களிடமிருந்து வேலையை பெற அதே ஊதியத்தைத்தான் ஒருவர் தர வேண்டும்.குறும்படம் , ஆவணப்படங்கள் போன்றவற்றில் நமக்கு தெரிந்தவர்கள் வீட்டில் , அலுவலகத்தில் என்று எடுத்துவிடலாம்.ஆனால் முழு நீளத் திரைப்படத்தில் அத்தகைய விஷயங்கள் சாத்தியமில்லை.அதிகப்பட்சம் காமிரா செலவு , படத்தொகுப்பு செலவு, மாற்று சினிமாவில் ஆர்வம் கொண்ட சில நடிகர்கள் கிடைத்தால் நடிகர்கள் செலவு ஆகியவற்றை ஒரளவு குறைக்கலாம்.மற்றபடி ஒரு நாளின் Production cost குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.அதாவது இயங்கிவரும் மைய சினிமாத்துறையின் மனிதர்களின் உதவியில்லாமல் வெளியிலிருந்து ஒரு முழு நீளத்திரைப்படத்தை உருவாக்குவது இன்றைய காலத்திலும் அவ்வளவு எளிதல்ல.மதுபானக்கடை படம் எடுக்கப்பட்டதும் கூட மைய சினிமாத்துறையின் தொழில்நுட்ப கலைஞர்களின் துணையோடுதான்.

இன்றும் திரைப்படத்திற்கு செல்வதுதான் பெரும்பாலும் முக்கிய கேளிக்கையாக இருக்கிறது.மாற்று திரைப்படங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் திரைப்படங்களையும் திரையிட திரையரங்குகள் தேவைப்படுகின்றன.வெகுஜன சினிமா திரையிடப்படும் திரையரங்குகளில் இவற்றை திரையிட முடியாது.திரையரங்குகள் கிடைக்காது.அப்படியென்றால் மாவட்டம் தோறும் பிரத்யேகமாக இத்தகைய மாற்று திரைப்படங்களை திரையிடுவதற்கான திரையரங்குகளை உருவாக்க வேண்டியது முக்கிய விஷயம் ஆகிறது.நூறு பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்படும் திரையரங்குகள் ஒரு சர்வரோடு இணைக்கப்பட்டு குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , முழூ நீள திரைப்படங்கள் ஆகியவை திரையிடப்படலாம்.பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படலாம்.அந்த வருமானத்தில் அரங்குகள் பராமரிக்கப்படலாம்.ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம்.இன்று இத்தகைய திரைப்படங்களை பார்க்க யார் விரும்புகிறார்கள்.அப்படியே விரும்பினாலும் இணையத்தில் எளிதாக பார்த்துவிடலாம்.

ஆக, உருவாக்குவது, விநியோகிப்பது, திரையிடுவது ஆகிய மூன்று தளங்களிலும் எந்த பொருளாதார சிக்கல்களும் இல்லாமல் ஒரு மாற்று சினிமா உருவாக வேண்டுமென்றால் அதற்கு ஒரு மாற்று உலகம்தான் வேண்டும்.ஏனேனில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் , நடிகர்கள் குறைந்த ஊதியத்தில் நடிக்கவும் வேலை செய்யவும் விரும்பினாலும் மைய வெகுஜன சினிமா துறையில் அதிக ஊதியம் கிடைக்கும் என்கிற போது அதை நோக்கித்தான் அவர்கள் செல்ல முடியும்.அவர்கள் குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய தேவைகளையும் குறைந்த செலவில் முடித்துகொள்வதற்கான மாற்று உலகம்தான் வேண்டும்.ஆனால் அப்படி ஒன்று எங்கும் எப்போதும் சாத்தியமில்லை.ஆக அவர் அதிக நாட்கள் மாற்று சினிமாவிற்கு என்று ஒரு வேலை உருவாக்கப்படும் அமைப்பில் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.டெல்லியில் துவங்கப்பட்ட தேசிய நாடகப்பள்ளியில் பயின்ற பலர் பின்னர் சினிமாவில்தான் நடித்தார்கள்.அதுதான் யதார்த்தம்.உண்மையில் எத்தகைய தீவிர சினிமாவை எடுக்க விரும்பினாலும் அதை இந்த மைய சினிமாத்துறையின் அமைப்பிற்குள்தான் செய்ய இயலும்.வெளியிலிருந்து ஒரிரு படங்கள் செய்யலாம்.ஆனால் தொடரச்சியாக ஒரு இயக்கம் போல செய்வது சாத்தியமில்லை.சாத்தியமான ஒரு விஷயம்,குறும்படங்கள் , ஆவணப்படங்கள், முழு நீளத்திரைப்படங்கள் ஆகியவற்றை திரையிட சில திரையரங்குகளை துவங்கலாம்.ஆனால் அதை செய்வது கூட அத்தனை எளிய காரியம் அல்ல.கேரளாவில் ஏ.கே.கோபாலன் இந்தியன் காபி ஹவுஸ் உருவாக்க செய்த முயற்சிகள் போல இங்கு பெரிய இயக்கமே உருவாக வேண்டும்.அப்போதுதான் அது சாத்தியமாகும்.