ஐரோம் ஷர்மிளா






நேற்றைய ஹிந்து செய்திதாளில் ஐரோம் ஷர்மிளாவை பற்றிய ஒரு செய்தி வந்திருக்கிறது.டெல்லியில் 2006யில் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்ததை முன்னிட்டு அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற விசாரணைக்காக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த ஷர்மிளாவிடம் நிருபர்கள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்டிருக்கிறார்கள்.கண்களில் நீருடன் , என்னுடைய வாழ்க்கை , திருமணம்…நான் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.எனக்கும் எல்லாவிதமான உணர்வுகளும் இருக்கிறது.நான் குழந்தைகளை தாங்க விரும்புகிறேன்.நான் ஒரு சாதாரண மனுஷி.நான் இந்த வாழ்க்கையையும் காதலையையும் துய்க்க விரும்புகிறேன்.இந்த சட்டம் மட்டும் நீக்கப்பட்டால் நான் இப்போது இங்கேயே உண்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை ஒரு நல்ல வேலை, பின்னர் காதல் அல்லது திருமணம், அதன்பின் குடும்பம் என்ற அமைப்பு.குடும்பம் நிலைக்க பணம்,அதிகாரம், செளகரியங்கள்.நமது கவலைகள் இதைச்சுற்றியே இருக்கிறது.பெரும்பாலானோரின் பிரச்சனைகள் ஒன்று சரியான வேலை கிடைக்காமல் இருக்கலாம்.அல்லது திருமணம் செய்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம்.அல்லது திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி அற்றதாக மாறியிருக்கலாம்.அல்லது குடும்பம் நிலைக்க பணம் ஈட்ட தெரியாமல் இருக்கலாம்.அல்லது குழந்தைகள் தவறான பாதையில் செல்வதால் உருவாகும் மனகசப்பாக இருக்கலாம்.இங்கு எழுதும்,போராடும் பெரும்பாலானோரின் உண்மையான பிரச்சனை மேலே சொன்ன பிரச்சனைகள்தான்.நிறைய பேர் ஏதேதோ தத்துவ தளத்திலான பிரச்சனைகளை பேசிக்கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவர்களின் பிரச்சனை வேலை,திருமணம்,பணம் ஆகியவற்றில் தான் இருக்கும்.அப்படி எல்லாமே சரியாக இருந்தும் ஒருவர் தத்துவம்,எழுத்து,போராட்டம் என்று பேசிக்கொண்டிருக்கும் போது அவரை கூர்மையாக கவனித்தால் அவரிடம் இருப்பது தன்முனைப்பு மட்டுமே என்பது தெரியும்.

இதை தாண்டி சமூக உணர்வுடன் அறவுணர்வுடன் உண்மையான கண்ணீருடன் தன் தனிப்பட்ட வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாத நிலையில் ஒருவரால் பிறரை எண்ணி கண்ணீர் சிந்தமுடியுமென்றால் பிறரின் பிரச்சனையை முன்னிட்டு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சியை விலக்கிவிட்டு மனமுவந்து போராடுவார்கள் என்றால் அவர்களே அற்புத மனிதர்கள்.

இன்று நாம் நமது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த வித சமூக உணர்வும் அற உணர்வும் இன்றி வாழும் சூழலில் இத்தகைய மனிதர்களை பார்க்கும் போது உண்மையிலேயே பேரதிசயம் போல இருக்கிறது.இந்த பெண் கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாக இப்படி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அதையொட்டிய டெல்லி வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உதயகுமார் கூடங்குளம் பிரச்சனைக்காக போராடினார்.இன்று அந்த போராட்டம் அநேகமாக முடிந்துவிட்டது.அவர் ஆம் ஆத்மியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.உதயகுமார் தமிழ் தேசியவாதம் பேசக்கூடியவர்.அவர் இந்திய தேசியவாதத்தை முன்வைக்கும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலில் நிற்கிறார்.

உதயகுமார் செய்த போராட்டம் ஒரு சாதனைதான்.தன்னால் முடிந்தவரை அறவழியில் வண்முறையின்றி அவர் போராடினார்.மக்களை ஒருங்கிணைத்தார்.ஆனால் இந்த போராட்டம் நீண்ட நாட்கள் நீடித்ததற்கு முக்கிய காரணம் தமிழக அரசு அந்த போராட்டத்தை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான்.பின்னர் தமிழக அரசு கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவு தெரிவித்த உடனே போராட்டம் அநேகமாக முடிந்துவிட்டது.

இதே ஆம் ஆத்மி கட்சி ஷர்மிளாவுக்கும் தேர்தலில் நிற்பதற்காக வாய்ப்பு வழங்கியிருக்கிறது.அதை அவர் மறுத்திருக்கிறார்.தான் ஒரு எதிர்ப்பாளர் மட்டுமே , அரசியல்வாதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்.உண்மையிலேயே இவையெல்லாம் பெரிய விஷயம்.

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஒரு செல்வந்தி பெண் ஜோசிமோவ் என்ற பாதிரியாரிடம் தனக்கு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனம் உள்ளது என்றும் ஆனால் அப்படி செய்யும் போது அது ஒரு கர்வத்தையும் ஏற்படுத்திவிடுகிறது என்றும் அதனாலேயே சேவையில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறுவார்.அதற்கு பாதிரியார் அன்பில் உயிர்ப்புள்ள அன்பு உயிர்ப்பற்ற அன்பு என்ற இரண்டு இருக்கிறது. உயிர்ப்புள்ள அன்பு தான் செலுத்தும் அன்பு தனக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காது.உயிர்ப்புள்ள அன்பிருந்தால் இந்த கர்வம் போன்ற பிரச்சனைகள் இருக்காது என்பார். மேலும் தொடர்ந்து உனக்குள் அப்படி சேவை செய்வது கர்வத்தை உண்டாக்குகிறது என்பதை என்னிடம் நேர்மையாக சொல்கிறாய் என்ற பெருமை உனக்கு இருக்குமென்றால் அது மேலும் கீழ்மைக்கே இட்டுச்செல்லும் என்பார்.

தஸ்தாவெய்ஸ்கி ஏன் சிறந்த எழுத்தாளர் , ஞானி என்றால் அவரால் மனித மனத்தின் இருட்குகைக்குள் சாதாரணமாக சென்று அசாதாரணமான விஷயங்களை சொல்லிவிட முடிகிறது என்பதால்தான்.

ஷர்மிளா தான் செய்யும் செயல் குறித்த எவ்வித கர்வமும் அற்றவர் என்பதை அவர் நிருபர்களிடம் சொன்னது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.அவர் கண்ணீருடன் சொன்ன அந்த வார்த்தைகள்தான் அவரை நம் காலத்தின் அற்பத மனிதர்களின் ஒருவராக காட்டுகிறது.நிருபர்கள் அப்போது அந்த பெண்ணின் பாதங்களை பார்த்திருக்கலாம்.அவருடைய பாதங்கள் இந்த மண்ணில் இருக்கிறது.அவை அந்தரத்தில் இல்லை என்பதை பார்த்து அதிசயத்திருப்பார்கள்.அவர் நம்மை போன்ற மனிதர் என்பது எத்தனை பெரிய அற்புதம்.இந்த முறை அமைந்திருக்கும் மத்திய ஆட்சியால் இந்த சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும்.அவருடன் சேர்ந்து அவருடைய காலடியில் ஒரு பிடி மணல் நிழலுக்காக ஏங்குகிறது.அவர் விரும்புவது போல அவர் மகிழ்ச்சியான நிம்மதியான தனிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்று மனம் அவாவுகிறது.இத்தகைய மனிதர்கள் தோற்க்கூடாது.


தமிழ் நவீன கவிதையின் இரு எல்லைகள்

 
 
 
 
தமிழ் நவீன கவிதைகளில் பொதுவாக இரு தரிசனங்களை பார்க்க முடிகிறது.ஒன்று இயற்கையிலிருந்து விலகி தனித்திருத்தல்.மற்றொன்று இயற்கையோடு இணைதல்.இயற்கையோடு இணைதல், அல்லது நம்மை இயற்கையோடு அடையாளம் கண்டுகொள்ளுதல் போன்ற தரிசனங்களை நவீன தமிழ் கவிதைகளில் தேவதேவனிடமும் பிரமிளிடமும் பார்க்கமுடியும்.இயற்கையிலிருந்து விலகி தனித்திருத்தல் என்ற ரீதியிலான கவிதைகள் தமிழில் நிறைய இருக்கிறது.அதில் முக்கியமானவை நகுலனுடையது. பிரமிள், தேவதேவன் ஆகியோர் முன்வைத்த தரிசனம் ஒரு அத்வைத தரிசனம்.நகுலன் முன்வைத்த கவிதைகளில் நாம் காணுவது அபத்த தரிசனம்.அதாவது அபத்தமாக வாழ்வை நோக்குவதன் மூலமாக நாம் கண்டடையும் தரிசனம்.இரண்டுமே முற்றிலும் வேறானவை.உதாரணமாக பிரமிளின் ஆலமரம் குறித்த இந்த கவிதையை பார்க்கலாம்.

திரிசங்கு
தளராத ஏழுதூண்
வேரூன்றி
அணுவிதையில் விளைந்த
அடையாளம் தெரியாமல்
விஸ்வரூபம்
விரிந்து
பச்சை வெள்ளிக்
கண்களாயிரம்
அந்தரத்தில்
இறங்கும் ஒளியை
எகிறி நோக்க
தபஸேற்றது
ஆல்.
ஒவ்வொரு இலையிலும்
தெறித்தது சுவர்க்கம்.

அதே ஆலமரத்தை குளம் போன்ற சூரல் நாற்காலியில் அமர்ந்தவாறு பார்க்கும் நகுலனின் காத்திருந்தேன் கவிதை இது.
 
…கண்ணெதிரே
கானல் கொதிக்கப்
பார்க்கும் தென்னை மரமனைத்தும்
பதுமையெனத் தாங்கி நிற்க,
ஆலின் ஆயிரமாயிரம்
சிறு இலைகள் பதறி மின்ன
வானம் நீலமாக விரிய
நான் தனித்திருந்தேன்.

இந்த இரண்டு கவிதைகளிலும் ஆலமரமும் அதன் சிறு இலைகளும் வருகிறது.இரண்டிலும் பகல் பொழுது.ஒன்றில் அது திரிசங்கு சொர்க்கமாக மாறுகிறது.மற்றதில் அது வெறும் நிகழ்வாக நிற்க கவிதைசொல்லி தனித்திருக்கிறான்.பிரமிளின் கவிதையில் கவிதைசொல்லி ஒவ்வொரு இலையிலும் தெறித்தது சொர்க்கம் என்னும் போது அதனோடு அவனும் இணைகிறான்.அவன் தன்னை தன் தனிமையை இழக்கிறான்.நானே அது என்கிறான்.நகுலன் கவிதையில் அதே கவிதைசொல்லி வெயில் பட்டு இலைகள் பதறி மின்னுவதை பார்க்கிறான்.அவனுக்கு அது திரிசங்கு சொர்க்கமாக காட்சி அளிக்கவில்லை.ஒரு எளிய நிகழ்வு.அவ்வளவே.அவன் தனித்து காத்திருக்கிறான்.

நவீன தமிழ் கவிதைகளில் பிரமிளின் , தேவதேவனின் இந்த தரிசன போக்கை தனித்த ஒன்றாகவே பார்க்கலாம்.மற்றொரு தளத்தில் எதன் மீதும் பற்றற்று நம்பிக்கையிழந்து வாழ ஒரு வழி , சாக ஒரு மார்க்கம் சொல்ல வல்ல சித்தரைக் காட்டாயோ (காத்த பானை – நகுலன்) என்று தனித்து தவிக்கும் ஒரு மனமும் நவீன தமிழ் கவிதைகளில் பார்க்கலாம்.ஒருவகையில் நகுலனும் பிரமிளும் இருவேறு தரிசன போக்குகளின் இருவேறு எல்லைகள்.அவை நவீன தமிழ் கவிதைகளின் இரு எல்லைகளும் கூட.இந்த முன்னோடிகளின் கவிதைகளையும் அதன் தரிசனங்களையும் செரித்து நாளைய தமிழ் கவிஞன் அதன் எல்லைகளை விஸ்தரிப்பான்.

(இன்மை இணைய இதழில் எழுதிய ஆசிரியர் பக்க கட்டுரை)