நந்தா








நந்தா அவனுடைய தந்தை இறந்த பிறகு பித்ரு தர்ப்பணம் முறையாக அளிக்காததே இன்னல்களுக்கு காரணம் என்று தீர்க்கதரிசி ஒருவர் சொல்கிறார்.இந்த நிலை நீடித்தால் தாயாரின் மரணம் கூட சம்பவிக்கலாம் அதனால் தர்ப்பணம் செய்து தாய் சேய் உறவு சீராகட்டும் என்று ஆசி வழங்குகிறார்.

நந்தா தன் தந்தையை சிறுவயதில் கோபத்தில் கொல்கிறான்.அவனுடைய தந்தை தன் தாயின் மீது உளவியல் ரீதியிலும் உடலளவிலும் வன்முறை செலுத்துவதை சகித்துக்கொள்ள இயலாமல் அவன் வன்மத்தோடு மரப்பொம்மை கொண்டு தாக்க அவன் இறந்து போகிறான்.கொலை செய்த காரணத்திற்காக நந்தா பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறான்.சிறையில் அவனை பார்க்க வரும் அவனுடைய அன்னை அவன் வேறொருவனை அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து அவனை பார்க்கமாலே திரும்பிச்செல்கிறாள்.அதன் பின் ஒருபோதும் அவள் அவனை வந்து சந்திப்பதே இல்லை.

நந்தா திரைப்படத்தின் மையம் அன்னைக்கும் சேய்க்குமான இந்த விலகிச்செல்லும் முரணியக்க உறவுதான்.நந்தா குரூரமானவன் என்று அவள் விலகிச்செல்கிறாள்.அவள் விலகிச்செல்வதால் அவன் மேலும் குரூரமாக நடந்துகொள்கிறான்.அவன் மேலும் வன்மம் கொண்டவனாக மாறும் போது அவள் மேலும் விலகிச்செல்கிறாள்.இறுதியில் அவள் அவனது வன்முறை எண்ணத்தை கண்டு மிகவும் அஞ்சி அவனை கொன்று அவளும் இறந்துபோகிறாள்.

நந்தா ஏங்குவது துயரத்தால் தலை கிறங்கி அவதியில் இருக்கும் தன்னை தன் அன்னை அரவணைத்து மடியில் கிடத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். அவனுடைய ஆசையெல்லாம் அவள் மடியில் தலை சாய்த்து துயில் கொள்ளவும் அவள் தன்னுடைய கைகளால் ஒரு கவளத்தை அவனுக்கு ஊட்டவேண்டும் என்பதே.அது அவனுக்கு இறுதிவரை சாத்தியபடவே இல்லை.அவனுடைய மனம் நிராகரிப்படும் அன்பால் மேலும் மேலும் துயரம் நிறைந்ததாக மாறுகிறது.மிகுந்த துயரத்திலிருப்பவன் பிறரை துயரத்திற்கு உள்ளாக்குகிறான்.ஒரு முறை அவன் பாசி மணிகள் விற்கும் தன் அன்னையை விலகிச்செல்ல சொல்லும் காவலாளியை கடுமையாக தாக்குகிறான்.தன் கண்ணத்தில் தன் அன்னையின் உள்ளங்கைகளை பதிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறான்.ஆனால் அவனது அன்னை அவனை நினைத்து அச்சம்கொள்கிறான்.அவனுடைய குரோதம் அவளை பதறவைக்கிறது.தான் ஒரு சரியான பிள்ளையை ஈன்றெடுக்கவில்லையோ என்று அவள் உள்ளுக்குள் சஞ்சலம் கொள்கிறாள்.ஆனால் ஒரு போதும் அவள் அவனுடைய துயரத்தின் பிரச்சனையே அந்த நிராகரிப்பட்ட அன்புதான் என்பதை புரிந்துகொள்வதே இல்லை.இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.தன்னுடைய கணவன் மிகவும் கீழ்த்தரமான குணத்தை கொண்டவனாகயிருந்தாலும் அவள் அதற்கு முன் தெருவில் இறங்கி பாசி மணிகள் விற்றதில்லை.அவள் கீழ் மத்தியதர வர்க்கத்தின் பெண்ணாக எளிய வாழ்வை வாழ்ந்து வந்தாள்.ஆனால் தன்னுடைய மகன் அவனை கொலை செய்வதின் மூலமாக அவளுடைய வாழ்வை எதிர்காலத்தை இருள் நிறைந்ததாக்குகிறான்.அவள் தெருவில் நின்று பாசி மணிகள் விற்று தன் மகளை படிக்க வைத்து உணவு உண்டு ஒரு தரித்தரமான வாழ்வை வாழ்ந்து வருகிறாள்.நாம் மகத்தான விஷயங்கள் பேசினாலும் தினசரி வாழ்க்கை எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருக்கிறது.அவளுடைய மகனின் செயல் அவளது தினசரி வாழ்வை கொடூரமானதாக மாற்றுகிறது.அந்த கோபம் அவளுக்கு அவனது மகன் மீது திரும்புகிறது.அவள் தொடர்ச்சியாக அவனிடமிருந்து விலகியே இருக்கிறாள்.அவன் தனக்கு சாத்தியப்பட்டுள்ள இந்த பாசி மணிகள் விற்கும் எளிய  தினசரி வாழ்வை கூட தன்னிடமிருந்து குரோதத்தால் பறித்துவிடுவான் என்று பதற்றம் கொள்கிறாள்.பெண்கள் பாதுகாப்பு உணர்வால்தான் மிகந்த வன்முறை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.என் உறவினர் ஒருவர் மிகவும் கோபக்காரர்,கச்சிதமானவர்.அவர் ஒரு போதும் தன் மனைவியை வெளியே சினிமாவிற்கோ, அல்லது சுற்றுலா இடங்களுக்கோ அழைத்துச் சென்றதில்லை.அவர் காலை ஏழு மணிக்கு வேலைக்கு செல்லும் போது காலை உணவு , மதியத்திற்கான உணவு அனைத்தும் தயாராக இருக்க வேண்டும்.அவர் வீட்டிலிருந்தால் அணைத்தும் அட்டவணை போட்டது போல நடக்கும்.ஒரு முறை அவர் வீட்டிலில்லை.ஏதோ சாக்கடை அடைத்துக்கொண்டது.நான் வீட்டிலிருந்தேன்.ஆனால் நான் அதை பற்றி யோசிக்கவோ அதை சரி செய்யவோ முயற்சிக்காமல் தேமேவென்று இருந்தேன்.அவர் தன் கணவர் வீட்டிலிருந்திருந்தால் இந்த நேரத்திற்கு இதை சரிசெய்திருப்பார் என்று என்னிடம் கூறி இப்படி எந்த செயலும் செய்யாமல் தேமே என்று இருக்கக்கூடாது என்றார்.அப்போதும் நான் போய் அதை சரி செய்யவில்லை.அவர் அப்படி சொன்னபின் எனக்கு அதை செய்ய பிடிக்கவில்லை.

விஷயம் என்னவென்றால் அவருக்கு தன் கணவர் தன்னை வெளியில் அழைத்து செல்வதில்லை என்பதிலோ , தன்னை சகமனிதராக நடத்துவதில்லை என்பதிலோ புகார் இல்லை.அவருடைய வீடும் அவருடைய தினசரி நாளும் செளகரியமானதாக இருந்தால் அவர் போதுமானதாக நினைத்தார்.அது அவருக்கு மனநிறைவை அளித்தது.இன்றைய பல பெண்களும் அநேகமாக அப்படித்தான் இருக்கிறார்கள்.நாங்கள் சுதந்திரமானவர்கள் என்று கூப்பாடு போடும் பல பெண்கள் தன் கணவரையே சார்ந்து வாழ்கிறார்கள்.முன்பு கணவர் வீட்டுக்கு சென்று வாழ்ந்த பெண்கள் இன்று தனியாக  வாழ சாத்தியப்படுபவனை தேர்தெடுத்து பின்னர் தங்களுடைய பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள்.அவ்வளவுதான்.

ஆக நந்தாவின் அன்னை தன்னுடைய செளகரியமான வாழ்வை இழந்ததால் தன் மகன் மீது வன்மம் கொள்கிறாள்.இந்நிலையில் சீர்திருத்த பள்ளியிலிருந்து வெளியே வரும் நந்தாவுக்கு அந்த ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவரின் அரவணைப்பு கிடைக்கிறது.தீயின் மடியில் வாழ்பவன் தீர்த்தகரையை அடைகிறான். 

பெரியவர் இந்தியா ஜனநாயக நாடாக மாறி மக்களாட்சி வந்த பின்னரும் தன் மூதாதையர்கள் போல தனக்கும் அந்த ஊரின் மீது அதிகாரம் இருப்பது போல வாழ்கிறார்.மக்களும் அவரை மதிக்கிறார்கள்.இலங்கையிலிருந்து தப்பித்து வரும் அகதிகளுக்கு உதவிகள் செய்கிறார்.நந்தாவை அவர் தன்னுடைய மகனாக பார்க்கிறார்.யசோதா தன் மகனான கிருஷ்ணன் ஒரு யுகபுருஷன் என்பதை அறிவதில்லை.அவளுக்கு அவன் அவளுடைய மகன்.அவ்வளவே.ஆனால் கிருஷ்ணன் தர்மத்தை நிலைநாட்ட பூமியில் அவதரித்தவன்.நந்தாவை அந்த ஊர் பெரியவர் நாம் அவதாரங்கள் என்கிறார்.அவனும் அவ்வாறே தன்னை எண்ணிக்கொள்கிறான்.பின்னர் பெரியவரின் மரணத்திற்கு காரணமானவர்களை அவன் கொலை செய்கிறான்.அவன் வரையில் அது தவறல்ல.அது தர்மத்தை நிலைநாட்டும் செயல்.ஆனால் எளிய அன்றாட வாழ்வை வாழும் அவனுடைய அன்னை கொலை செய்யப்பட்டவனின் மனைவியின் , குழந்தைகளின் சாபத்தை எண்ணி பதறுகிறாள்.அவள் அறிந்த அறத்தின் வழியாக பார்க்கும் போது அவன் மிகவும் கீழானவனாக இருக்கிறான்.அவள் அவனை உணவில் விஷம் வைத்து கொல்கிறாள்.இறுதியாக தன் அன்னையின் கைகளால் உணவருந்தி அவளின் மடியில் தலைசாய்த்து நந்தா இறந்துபோகிறான்.அவளும் இறந்துபோகிறாள்.

நந்தா நிராகரிப்பட்ட அன்பின் வலியை பேசும் திரைப்படம்.இதில் அவன் தன்னுடைய தந்தைக்காக தர்ப்பணம் செய்யும் காட்சியில் இந்த ஆண்டாளின் திருப்பாவை பாடல் வருகிறது.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற் பாடி, மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

இதில் வடமதுரை மைந்தனான நந்தகோபாலை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால் நாம் செய்த பாவங்கள் தீயினில் தூசாகும் என்று ஆண்டாள் பாடுகிறார்.நந்தாவின் அன்னை அவனை வாயினாற் நந்தா என்று அழைத்து மனதில் உவகையோடு அவனுக்கு அண்ணமிட்டு அவனை தன் மடியில் கிடத்தி உறங்கவைத்திருந்தால் அவன் அறியாது செய்த பாவங்களும் அறிந்து செய்த பாவங்களும் தீயினால் தூசாகியிருக்கும்.அவள் வாய் பேச முடியாதவளாக இருக்கிறாள்.அவளால் தன் மகன் மீது உள்ள அன்பை வெளிப்படுத்த தெரியாதவளாகவும் இருக்கிறாள்.நந்தா என்ற வாயினால் பாட அவளால் இயலவில்லை.ஒரு வகையில் அவளுடைய இறுக்கமே அவளது மகனில் மேலும் குரூரமாக வெளிப்படுகிறது.

பாலாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று நந்தா.மிக குறைந்த கால அளவு கொண்ட திரைப்படம்.கச்சிதமான காட்சிகள்.ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்த படம்.மிக வேகமாக நகரக்கூடிய வகையில் பாலாவின் படங்கள் இருப்பதில்லை.அதே நேரத்தில் மிஷ்கினை போல அவர் காட்சி கோணங்களுக்காக மிகவும் வருத்திக்கொள்வதில்லை.அதாவது பாலாவின் காட்சி கோணங்கள் அந்த காட்சியின் உளவியல்தன்மை பொறுத்து அமைவது.பாலாவின் தொலைந்து போன பால்ய காலம் தான் நந்தா திரைப்படத்தின் கதை.ஒரு வகையில் தங்கள் பால்ய காலத்தை தொலைத்தவர்கள்தான் மிகுந்த துயரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அத்தகைய துயரத்தை கொண்டவர்களில் சிலர் வளர்ந்த பின் தங்கள் துயரத்தை பிறரின் துயரத்தோடு அடையாளப்படுத்தி மேண்மையை நோக்கி நகர்கிறார்கள்.சிலர் தங்கள் துயரத்திலேயே ஒடுங்கி பிறரை மேலும் துயரத்திற்குள்ளாக்கி கீழ்மையை நோக்கி நகர்கிறார்கள்.அவர்களுக்கு பிறரின் துயரத்தை புரிந்துகொள்ளும் திராணி இருப்பதில்லை.நந்தா மேண்மைக்கும் கீழ்மைக்கும் இடையில் நின்று அல்லலுருபவன்.மரணம் அவனுக்கு அமைதியை அளிக்கிறது.


No comments: