கொண்டாட்ட வெளிகள்


அமெரிக்காவில் குடியானவர்கள்,பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல வேலையில் அமர்ந்துகொண்டு , வீடு கார் என்று செட்டிலானவர்களில் சிலர் எரிமலை போல தமிழ்நாட்டின் நிலை நினைத்து எரிந்துகொண்டே இருக்கிறார்கள்.கோக்,பெப்சி தடை செய்ய வேண்டும்,ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்,விவசாயம் பெருக வேண்டும்,மாணவர்கள் அரசியலில் இறங்க வேண்டும்,இதோ யுகப் புரட்சி என்று சும்மா குமறுவது என்று இவர்கள் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.இவர்கள் எது நடந்தாலும் ஒரு நாள் விடுப்பு கூட எடுக்க மாட்டார்கள்.ஏன் இத்தனை கூப்பாடு போடுகிறார்கள் என்று புரியவில்லை.இதில் தனித்தமிழ்நாடு கோஷம் போடுவர்கள் வேறு இருக்கிறார்கள்.அராபிய வசந்தம்,வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு , ஜவகர்லால் பல்கலைகழகத்தில் நடந்த போராட்டம், FTII யில் நடந்த போராட்டம் இவை என்னவாயிற்று.கன்னையா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்.

பெரு நகர வாழ்க்கை , பன்னாட்டு நிறுவனத்தில் வேலை,இது தானே இன்றைய இளைஞனின் கனவாக இருக்கிறது.அதற்காகத்தானே பள்ளிப்படிப்பு , கல்லூரிப்படிப்பு எல்லாம்.இன்றைய இளைஞனிடம் என்ன கலாச்சார அடையாளம் இருக்கிறது.எதுவும் இல்லை.சமயம் சார்ந்த எந்த அடையாளத்தையும் இன்றைய தலைமுறை பெறவில்லை.ஒரு ஆழ்வார் பாசுரத்தையோ , திருவாசக வரிகளையோ சொல்ல ஒருவருக்கும் தெரியாது.ஏனேனில் இன்றைய தலைமுறையினரின் பெற்றோருக்கே அது தெரியாது.எந்த பண்டிகைக்கும் பின்னால் உள்ள வரலாற்றையும் தொன்மத்தையும் நாம் அறிவதில்லை.விவசாயத்தை , நெசவை , குயவை தன் தொழிலாக ஏற்றுக்கொள்ள எந்த இளைஞன் விரும்புகிறான்.எந்த பெற்றோர் விரும்புகிறார்கள்.நமது போராட்டங்கள் உள்ளீடற்ற வெற்று போராட்டங்கள்.நமக்கு கொண்டாட்ட வெளிகள் இல்லை.நிகழ்வுகள் இல்லை.இன்று தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லை.உண்மையில் இந்த போராட்டமே நல்ல அரசியல் தலைவர் இல்லை என்பதனால் உருவானதுதான்.தமிழகத்தில் நல்ல வலுவான மாநிலத்தலைவர் உருவாக வேண்டும்.ஆந்திராவில் என்.டி.ஆர் தெலுகு தேசம் கட்சியை உருவாக்கியதற்கு பின்னால் இருந்த முக்கிய காரணம் அவர்கள் வலுவற்று போனதால்தான்.இங்கு இப்போது அப்படியான வலுவான தலைமை இல்லை என்பதே நம்மை பாதுகாப்பற்றவர்களாக நினைக்க வைக்கிறது.தர்மராஜ் சொல்லியுள்ளது போல தந்தையற்ற வீட்டில் நிற்கும் சிறுவன் போன்ற நிலை.

உண்மையில் இன்றைய மாறிவரும் கலாச்சார சூழலில் அதற்கான கொண்டாட்ட வெளிகளும், நிகழ்வுகளும் உருவாக வேண்டும்.பெருநகர மனிதனின் வாழ்வின் விழுமியங்களை முன்னிறுத்தும் கேளிக்கை நிகழ்வுகள் அதன் குறியீட்டு தளத்தில் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அவை நிகழ வேண்டும்.ஒரு திருவிழா மனநிலையை அவை உருவாக்க வேண்டும்.அவை தான் இன்றைய தேவை.

No comments: